நமது இலக்குகளை அடைய ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானதாக இருக்கும்.. ஜனாதிபதி உரை
டெல்லி: நமது இலக்குகளை அடைய ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானதாக இருக்கும் என்றும் நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல நமக்கு பொன்னான வாய்ப்புகள் உள்ளன என்றும் நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
நாட்டின் 75-வது குடியரசு தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தில் டெல்லியில் உள்ள கடமை பாதையில் தேசியக் கொடியை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்று மரியாதை செலுத்துவார். குடியரசு தின சிறப்பு விருந்தினராக இந்த ஆண்டு பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்கிறார்.

முப்படைகளின் அணிவகுப்பும் குடியரசு தின விழா நாளில் கடமை பாதையில் நடைபெற உள்ளது. மாநில அரசுகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெறும். இதனை முன்னிட்டு இன்று இரவு 7 மணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் அமைப்பை உருவாக்க பங்களித்தவர்களுக்கு இன்று நாம் மரியாதை செலுத்துவோம். நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை வழங்கிய அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
அமிர்த காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் இந்தியா உள்ளது. நமது இலக்குகளை அடைய ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானதாக இருக்கும். ராமர் கோயில் மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல. நீதித்துறை செயல்பாட்டின் நம்பிக்கைக்கும் சான்று. நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல நமக்கு பொன்னான வாய்ப்புகள் உள்ளன. அமிர்த காலம் இதுவரை இல்லாத தொழில் நுட்ப மாற்றங்களின் காலமாகவும் இருக்கும். இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications