3 வருஷம்.. போதைக்கு அடிமையாகி ரவுடியான மல்யுத்த வீரர்! போக்சோ வழக்கில் தூக்கிய டெல்லி போலீஸ்!
டெல்லி: 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்த மூன்றாண்டுகளாக தேடப்பட்டு வந்த மல்யுத்த வீரர் ஒருவர் தற்போது டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியை சேர்ந்தவர் செஹ்ராவத். இவருக்கு சிறு வயது முதல் மல்யுத்த வீரராக வேண்டும் என்று ஆசை இருந்திருக்கிறது. இதனையடுத்து கடந்த 2002ம் ஆண்டு மல்யுத்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற தொடங்கினார். தொடக்கத்தில் உள்ளூர் அளவில் போட்டிகளில் விளையாடிய இவர் பின்னர் வெளியூர் போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார். தொடர்ந்து பெற்ற வெற்றியானது இவரை மேலும் உந்தி தள்ளி இருக்கிறது. இதன் பின்னர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார்.
அங்கேயும் சில போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக சொல்வதெனில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுசில் குமார் சத்ரசல் ஸ்டேடியத்தில் பயிற்சி பெற்று வந்திருந்த காலத்தில் அதே ஸ்டேடியத்தில் இவரும் பயிற்சி பெற்று வந்திருக்கிறார். ஆனால் காலப்போக்கில் இவரது தடம் மாறி இருக்கிறது. போதை, அதனால் உருவான சிறு சிறு சண்டைகள். அந்த சண்டையில் இவர் பெற்ற வெற்றி ஆகியவை ரவுடிசத்தை நோக்கி இவரை நகர்த்தியுள்ளது.

ரவுடி
பின்னர் கட்டப்பஞ்சாயத்து செய்வதில் கவனம் செலுத்தியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "இவர் நேரடியாக தலையீடு செய்யமாட்டார். மாறாக ஒரு பெரிய குழுவில் அதன் தலைவனுக்கு இடது கரமாக செயல்படுவார். இப்படிதான் இவர் மீது முதன் முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது 2006ம் ஆண்டு ஒரு மோதல் சம்பவம் இவரது குழுவுக்கும் எதிர் தரப்பு குழுவினருக்கும் நடைபெற்றிருக்கிறது. இரு தரப்பினரும் பயங்கரமான ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதில் இவருடைய சக கூட்டாளிகளாக பப்லு, கோகோ மற்றும் நீது ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வழக்குப்பதிவு
ஆனால், இவர் மட்டும் தப்பியுள்ளார். அப்போதுதான் முதன் முறையாக நாங்கள் இவர் மீது வழக்குப்பதிவு செய்தோம். அதன் பின்னர் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். சில நாட்களில் விடுதலை ஆனதும், கொலை முயற்சியில் இவரை நாங்கள் மீண்டும் தேட தொடங்கினோம். அதன் பின்னர் இவருடைய வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல், பயங்கர ஆயுதங்களை பதுக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் இவரது பெயர் அடிப்பட தொடங்கியது. நாங்கள் கைது செய்ய முயற்சிக்கையில் திடீரென இடத்தை மாற்றிக்கொண்டு போய்விடுவார்.

பாலியல் பலாத்காரம்
பல இடங்களில் இவருக்காக ஆட்கள் செயல்பட்டு வந்தார்கள். அதேபோல இவர் ஒரு இடத்தில் சில நாட்களுக்கு மேல் தங்கமாட்டார் என்பதால் இவரை பின்தொடர்வதே பெரும் சவாலாக இருந்தது. ஒரு முறை குற்றம் செய்பவர்களை பிடிப்பது கடினமாக இருந்தாலும் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை சுலபமாக பிடித்துவிடலாம். இதற்கேற்றவாறு 2019ம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தின் மூலம் இவர் மேலும் முக்கிய குற்றவாளியாக உருவெடுக்க தொடங்கினார். அதாவது சம்பவத்தன்று தென்மேற்கு டெல்லியின் சாவ்லா பகுதியில் இருந்து 16 வயது சிறுமியை இவர் கடத்தி சென்றுள்ளார்.

கைது
முதலில் எங்களுக்கு சிறுமி காணவில்லை என்று மட்டுமே புகார் வந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை செய்தபோது சிறுமி கடத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இரண்டு நாட்கள் கழித்து சிறுமி மீட்கப்பட்டாள். ஆனால் இந்த இரண்டு நாளும் செஹ்ராவத் சிறுமியை தொடர் பலாத்காரம் செய்திருக்கிறார். இந்த சம்பவத்தில் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு அப்போதிலிருந்து தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியது. இதன் காரணமாக செஹ்ராவத் நிரந்தரமாக தலைமறைவானார். பின்னர் சில நாட்களுக்கு முன் அவர் தங்கி இருந்த இடத்தை நாங்கள் கண்டுபிடித்தோம். இவர் ஹரியானாவின் பிவானியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.

மூன்றாண்டுகளுக்கு பிறகு
இந்த தகவலை நாங்கள் உறுதி செய்து அங்கு போவதற்குள் அங்கிருந்து தப்பிவிட்டார். அதன் பின்னர் டிசிபி அமித் கோயல் தலைமையிலான குழு இவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தது. இவர் தெற்கு டெல்லியில் பதுங்கி இருந்தார் இதனையடுத்து தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளனர். மல்யுத்த வீரர் ஒருவர் மூன்றாண்டு தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்யப்பட்டிருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications