அதிக லக்கேஜா? செல்லாது செல்லாது.. விமானங்களைப் போல இனி ரயில்களில் கூடுதல் கட்டணம்! ஐஆர்சிடிசி அதிரடி
டெல்லி : விமான நிறுவனங்களை போல இனி மத்திய அரசு நிறுவனமான ரயில்வே துறையிலும் கூடுதல் லக்கேஜ்களை எடுத்து செல்லும் பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது
'இந்தியன் இரயில்வே' இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இது உலகிலுள்ள மிகப்பெரிய ரயில் நெட்ஒர்க்குகளில் ஒன்றாகும். ஆண்டுக்கு 500 கோடி மக்கள் இந்திய ரயில்களில்பயணிக்கின்றனர்.
ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்குகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. 16 இலட்சம் பணியாளர்கள் ரயில்வேயில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலுள்ள ரயில்வே இருப்புப் பாதையின் மொத்த நீளம் 63,140 கிலோமீட்டர்கள். இந்த பாதைகளில் தினமும் 14,444 ரயில்கள் இயக்கப்படுகிறது.

ரயில்வே நிர்வாகம்
கடந்த பல ஆண்டுகளாக ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் லக்கேஜ் குறித்து சிக்கல்கள் இல்லை. அதனை ரயில்வே அதிகாரிகள் கண்காணிப்பதோ அல்லது பயணிகள் கண்டுகொள்வதோ இல்லை. இனிமேல் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள இந்திய ரயில்வே துறை மூலமாக இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் லக்கேஜ்களுடன் நீங்கள் பயணம் செய்வது கண்டறியப்பட்டால் , அதற்காக இனி அபராதம் செலுத்த நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

புதிய விதிமுறைகள்
மத்திய அரசின் ரயில்வே இப்போது ஒரு புதிய கொள்கையை அறிவித்துள்ளது. அதன்படி விமானப் பயணத்தைப் போலவே, இனி ரயில்களில் பயணிக்கும் ரயில் பயணிகளும் தங்கள் பயணத்தின் போது அதிகப்படியான லக்கேஜ்களை தங்களுடன் எடுத்துச் செல்வதற்கு இனி வரும் காலங்களில் கூடுதலா கட்டணம் செலுத்த வேண்டும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக ரயில் பயணங்களின்போது அபாய சங்கிலியை இழுக்கும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வருவதையும் சக பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு இனிமேல் ரயில் பயணத்தின் போது அதிகப்படியான உடல் எடுத்துச் செல்வது குறித்து ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

லக்கேஜ்களுக்கு கட்டுப்பாடுகள்
ரயிலில் பயணம் செய்யும்போது அதிக உடைமைகளுடன் பயணம் செல்வதற்கு வரம்பு இருந்தும் அதனை பெரும்பாலான பயணிகள் கடைபிடிப்பதில்லை. பெரும்பாலானோர் அதிக லக்கேஜ்களுடன் பயணிப்பதால் மற்ற பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால் ரயில் பயணத்தின் போது அதிகப்படியான உடைமைகளுடன் பயணிக்க வேண்டாம் என பயணிகள் ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," உடைமைகள் அதிகமாக இருந்தால் பயணத்தின் இன்பம் பாதியாக இருக்கும்! அதிக உடைமைகளை ஏற்றிக்கொண்டு ரயிலில் பயணம் செய்ய வேண்டாம். உடைமைகள் அதிகமாக இருந்தால், பார்சல் அலுவலகத்திற்குச் சென்று அதனை முன்பதிவு செய்யுங்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம்
இந்நிலையில், ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதாவது. ஏசி முதல் வகுப்பில் 70 கிலோ. ஏசி 2 டயர் படுக்கை, முதல் வகுப்பில் 50 கிலோ, ஏசி 3 டயர் படுக்கை, ஏசி இருக்கை 40 கிலோ, இரண்டாம் வகுப்பில் 40 கிலோ வரையும் உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது வகுப்பில் பயணிப்பவர்கள் வெறும் 35 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications