நிர்பயாவை போல மீண்டும் ஒரு கொடூரம்.. டெல்லியில் ஓடும் வேனில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்! கொடுமை
டெல்லி: தேசிய தலைநகர் பகுதியான ஃபரிதாபாத்தில் பெண் ஒருவர் ஓடும் வேனில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது. 28 வயதான அந்தப் பெண்ணை ஏமாற்றி வேனில் ஏற வைத்த அவர்கள், அப்பெண்ணைப் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்தப் பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றத்தைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், அதையும் தாண்டி பெண்களுக்கு எதிரான கொடூரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் தேசியத் தலைநகர் பகுதி என்சிஆருக்கு உட்பட்ட ஃபரிதாபாத்தில் அரங்கேறியுள்ளது.

ஓடும் வேனில் பலாத்காரம்
அங்கு 28 வயது பெண் ஒருவர் ஓடும் வேனில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். திங்கள்- செவ்வாய்க்கிழமை இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. அந்தப் பெண் ஓடும் வேனில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சாலையில் தூக்கி வீசப்பட்டார்.
ஏற்கனவே திருமணமான அந்தப் பெண் இரவு நேரத்தில் வீட்டிற்குச் செல்லச் சாலையில் காத்திருந்துள்ளார். அப்போது வேனில் வந்த இரு இளைஞர்கள், அந்த வழியாகவே செல்வதாகச் சொல்லிய இருக்கிறார்கள். வீட்டில் இறக்கிவிட்டுவிடுவதாகக் கூறியுள்ளனர். முதலில் அந்தப் பெண் தயங்கினாலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளனர். இதனால் அந்தப் பெண்ணும் அவர்களை நம்பி வேனில் ஏறியிருக்கிறார்.
பலாத்காரம்
இருப்பினும், வேன் அவரது வீட்டை நோக்கிச் செல்லாமல் குருகிராம் சாலையில் சென்றுள்ளது. அப்போது தான் அந்த கொடூரம் நடந்துள்ளது. சுமார் 2 மணி நேரம் அந்தக் கொடூரர்கள் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சத்தம் போட்டாலோ அல்லது எதிர்ப்பு தெரிவித்தாலோ கொலை செய்துவிடுவோம் என்று சொல்லியும் கொலை மிரட்டல் விடுத்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 3 மணியளவில் அந்தப் பெண்ணை நடுரோட்டில் தூக்கி வீசியுள்ளனர். எஸ்.ஜி.எம். நகரில் உள்ள ராஜா சவுக் அருகே ஓடும் வேனில் இருந்து அந்த பெண்ணை தள்ளிவிட்டுள்ளனர். கீழே விழுந்ததில் அந்த பெண்ணுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. முகம் முழுவதும் காயப்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவு
இதையடுத்து அப்பெண் உடனடியாகத் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தனது சகோதரிக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடும்பத்தினர், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வேனில் இருந்து தள்ளிவிட்டதில் பெண்ணுக்கு முகத்தில் மோசமான காயம் ஏற்பட்டது. அதற்காக வருக்கு 10 முதல் 12 தையல்கள் போட்டனர். தீவிரச் சிகிச்சைக்குப் பிறகு, பெண்ணின் உடல்நிலை ஓரளவுக்குச் சீராகியுள்ளது. இருப்பினும், அவர் இன்னுமே அதிர்ச்சியில் இருக்கிறார்.. இந்தச் சம்பவம் குறித்து இதுவரை அவரிடம் போலீசார் வாக்குமூலத்தைப் பதிவு செய்யவில்லை.
பின்னணி
திருமணமான அப்பெண் கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த சம்பவம் நடந்த நாளில் தான் அவருக்குத் தனது தாயார் உடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு அந்த பெண் தனது தோழி வீட்டிற்குச் சென்றுள்ளார். மூன்று மணி நேரத்தில் வீட்டிற்கு திரும்புவதாக அப்பெண் கூறியிருக்கிறார். தோழி வீட்டில் இருந்து திரும்பியபோது தான் இந்தக் கொடூரம் நடந்துள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இப்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட இரு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வேனும் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications