உ.பி. தேர்தல்.. கிங்கா? கிங் மேக்கரா? விவசாயிகள் நிலைப்பாடு என்ன.. ராகேஷ் டிக்கைட் கூறியதை பாருங்கள்
டெல்லி: பல மாதங்களாக மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் தற்போது தான் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து விவாசாய அமைப்புகளின் தலைவர் ராகேஷ் டிக்கைட் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஓர் ஆண்டாக விவசாயிகள் குளிர், வெயில் என எதையும் கருத்தில் கொள்ளாமல் போராட்டத்தை நடத்தினர். அப்போது சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.
இதையெல்லாம் தாண்டி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை எந்தவொரு சமரசமும் இல்லாமல் தொடர்ந்தனர். விவசாயிகள் போராட்டத்திற்கு முதலில் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

பிரதமர் மோடி
ஆனால், விவசாயிகள் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் போராட்டத்தைத் தொடர்ந்தனர். தலைநகர் டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் அங்கேயே குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டங்கள் பல மாதங்கள் தொடர்ந்த நிலையில், கடந்த மாதம் நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். விவசாயிகளின் நலனை மேம்படுத்தவே இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததாகவும் இருப்பினும் சிலருக்கு இது குறித்துப் புரிந்து கொள்ள வைக்க அரசால் முடியவில்லை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

புதிய கட்சி
விவசாய சட்டங்களை வாபஸ் பெறும் மசோதாக்கள் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னரே விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். இந்தச் சூழ்நிலையில், விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடிய 32 அமைப்புகளில் 22 அமைப்புகள் ஒன்றிணைந்து புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர். சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கட்சி வரும் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலுக்கு நோ
இந்நிலையில் இது தொடர்பாக விவசாயிகள் போரட்ட்ததை முன்னெடுத்த ஒன்றிணைந்த விவசாய அமைப்புகளில் தலைவர் ராகேஷ் டிக்கைட், "சம்யுக்த் கிசான் மோர்ச்சா (விவசாய அமைப்பு) எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. அரசியலில் ஈடுபடப் போவதில்லை. அதாவது சம்யுக்த் கிசான் மோர்ச்சா விவசாய அமைப்பாக எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் குறித்த எனது நிலைப்பாட்டைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு அறிவிப்பேன்.

கிங் மேக்கர்
இருப்பினும் உ.பி.யில் விவசாயிகள் தான் கிங் மேக்கராக இருப்பார்கள். விவசாய அமைப்புகளில் இருப்போர் தொடர் போராட்டத்திற்குப் பின்னர் தற்போது அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர் எனவே, அவர்கள் திரும்பி வந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்" என்றார். முன்னதாக கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் தமிழகம், மே. வங்கம் உட்பட 5 மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக விவசாய அமைப்புகள் பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மன்னிப்பு கேட்க தேவையில்லை
மேலும் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பிரதமர் மன்னிப்பு கேட்பதை நாங்கள் விரும்பவில்லை. இது வெளிநாட்டில் அவருடைய நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும். எந்த முடிவு எடுத்தாலும் அது விவசாயிகளின் சம்மதமின்றி நடக்காது. நாங்கள் நாங்கள் நேர்மையான முறையில் தலைநகர் டெல்லியில் போராட்டம் செய்தோம். ஆனால், டெல்லி எங்கள் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கவில்லை என்பதே உண்மை.

பிரதமரை அவமானப்படுத்துகிறார்
மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ரத்து செய்யப்பட்ட விவசாய சட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்ற ரீதியில் பேசியுள்ளார். இது பேச்சு விவசாயிகளை ஏமாற்றும் வகையிலான பேச்சு. விவசாய சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்த பிரதமரை அவமானப்படுத்துவதும் வகையில் அமைச்சரின் இந்த பேச்சு உள்ளது. அதேநேரம் அவர்கள் மீண்டும் விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தால், நாங்கள் மீண்டும் எங்கள் போராட்டத்தைத் தொடங்க வேண்டியிருக்கும்" என்றார்.

அமைச்சர் விளக்கம்
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் பேசிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "இப்போது ஒரு அடி பின்வாங்கியுள்ளோம். ஆனால் விவசாயிகள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்பதால் கண்டிப்பாக மீண்டும் முன்னோக்கிச் செல்வோம்" என்று கூறியது சர்ச்சையானது. இதையடுத்து அவர் அளித்த விளக்கத்தில் "மத்திய அரசு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நல்ல சட்டங்களைக் கொண்டு வந்தது என்று நான் கூறினேன். சில காரணங்களால் அதைத் திரும்பப் பெற்றோம். இருப்பினும் விவசாயிகளின் நலனுக்காக அரசு தொடர்ந்து பாடுபடும் என்றே நான் கூறினேன்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications