'எதையும் செய்யவில்லை'.. மத்திய அரசு மீது விவசாயிகள் அதிருப்தி.. ஆளுநர் மாளிகை நோக்கி இன்று பேரணி
டெல்லி: கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி, நாடு முழுவதிலும் இன்று கவர்னர் மாளிகை நோக்கி இன்று விவசாயிகள் பேரணி நடத்துகின்றனர்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019- ஆம் ஆண்டு புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது.
இதில் 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
சூரிய சக்தி மின்சாரம்... அசத்தும் காஞ்சிபுரம் விவசாயி எழிலன்.. மன்கிபாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டு

பாதகமான அம்சங்கள் இருப்பதாக
வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டன. இந்த புதிய சட்டங்களில் விவசாயிகளுக்கு பாதகமான அம்சங்கள் இருப்பதாகவும் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லை பகுதிகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தினர்.

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய..
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த போராட்டம் தொடங்கியது. டெல்லி எல்லைகளில் முகாமிட்டு ஓராண்டுக்கும் மேல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்யுக்தா கிஷான் மோச்சா என்ற விவசாய கூட்டமைப்பு இந்த போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தியது. விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு அடிபணிந்த மத்திய அரசு, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தது.

இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை
இந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்கள் போராட்டம் தொடங்கியதை குறிக்கும் வகையிலும், மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இன்று நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குறித்து அரசு எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்ததாகவும் ஆனால், இது வரை அதற்கான எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று விவசாய சங்க தலைவர்கள் குற்றம் சாட்ட்டியுள்ளனர்.

எதுவுமே செய்யவில்லை
இது தொடர்பாக சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பின் தலைவர் ஹன்னன் மோல்லா கூறுகையில், "எங்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. ஆனால், இதுவரை எதுவுமே செய்யவில்லை. நாட்டில் உள்ள விவசாயிகளை தான் ஒரு துரோகி என்பதை மத்திய அரசு நிரூபித்துள்ளது. எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு நிரூபித்துள்ளது" என்றார்.

இன்று போராட்டம்
வாக்குறுதியை மீறிய மத்திய அரசை கண்டித்து இன்று நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. அதேபோல், வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை அனைத்து அரசியல் கட்சிகளின் மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் அலுவலகங்கள் நோக்கி பேரணி நடத்தப்படும் என்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வரும் 8 ஆம் தேதி கூட்டம் நடத்தி முடிவு செய்வோம் என்று விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.