மோடி அரசு இருக்கும் வரை... போராட்டத்தை தொடர தயார்... விவசாய சங்க தலைவர் திட்டவட்டம்
டெல்லி: சிறிய போராட்டங்களைக் கலைத்ததுபோல விவசாயிகள் போராட்டத்தைக் கலைக்க மத்திய அரசு முயல்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ள நரேந்திர டிக்கைட் மோடி அரசு இருக்கும் வரை போராட்டம் நடத்த தயார் என்று அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகரில் நடைபெற்று வரும் போராட்டம் 100 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. மத்திய அரசு 19 மாதங்கள் வரை சட்டங்களை நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக அறிவித்தது.
இருப்பினும், விவசாய சட்டங்கள் முழுவதுமாக திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், தேவைப்பட்டால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நீடிக்கும் வரை போராட்டம் நடத்த தயார் என்று விவசாயச் சங்கங்கள் அறிவித்துள்ளன.

கலைக்க முயற்சி
இது தொடர்பாக விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான நரேந்திர டிக்கைட் கூறுகையில், "கடந்த காலங்களில் பல்வேறு திட்டங்களைப் பயன்படுத்தி போராட்டங்களைக் கலைத்தது போல விவசாயிகளின் போராட்டத்தையும் கலைத்துவிடலாம் என்று கருதுகிறது. ஆனால், அது நிச்சயம் நடக்காது. விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

மோடி அரசு இருக்கும் வரை
இந்த அரசு தவறான புரிதலைக் கொண்டுள்ளது. ஏனென்றால் இந்த அரசு ஒருபோதும் இதுபோன்ற எதிர்ப்பை எதிர்கொண்டதில்லை. சிறிய போராட்டங்களைக் கலைத்ததுபோல எங்களையும் கலைக்க அவர்கள் முயல்கின்றனர். ஆனால் நாங்கள் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து எங்கள் உரிமைக்காகப் போராடி வருகிறோம். இந்த அரசு இன்னும் மூன்றரை ஆண்டுகள் பதவியில் இருக்கும். இதுவரை போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தவும் எங்களால் முடியும்.

குறைந்தபட்ச ஆதரவு விலை
மத்திய அரசு திரும்பத் திரும்ப குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று கூறுகிறது. அப்படி தொடரும் என்றால் அதற்கான சட்டத்தை ஏற்படுத்துவதில் அவர்களுக்கு என்ன தயக்கம். இதேபோலத் தான் கேஸ் சிலிண்டர் மானியத்திற்கும் சொன்னார்கள். ஆனால் இப்போது சிலிண்டர் மானியம் கிட்டதட்ட இல்லாமல் போய்விட்டது. இதனாலேயே நாங்கள் எம்எஸ்பிக்கு சட்ட பாதுகாப்பு கேட்கிறோம் "என்று அவர் கூறினார்.

குற்றச்சாட்டிற்கு மறுப்பு
மேலும், விவசாயிகள் போராட்டத்தின் மூலம் சிலர் பணம் சம்பாதிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்த அவர், இது உரிமைக்காக நடைபெறும் போராட்டம் என்றும் இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகள் கூட நன்கொடை மூலமே நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications