Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேளாண் சட்டங்களை எதிர்த்து குளிர்,மழை,வெயில் என பாராமல் போராடிய விவசாயிகளுக்கு வெற்றி - டைம் லைன்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என தொடங்கிய விவசாயிகள் போராட்டம் குளிர், வெயில்,மழை என ஓராண்டினை நிறைவு செய்துள்ளது. விவசாயிகளின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாக கடும் குளிர், மழை, வெயில் என்று பாராமல் போராடியதற்கு வெற்றி கிடைத்துள்ளது. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறப்போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். டெல்லி சலோ என்று தொடங்கிய போராட்டம் ஓராண்டுகளை நிறைவு செய்யப்போகிறது. பல உயிர்களை தியாகம் செய்து தங்களின் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர் விவசாயிகள்.

Recommended Video

    Who is Rakesh Tikait | Farm Laws | Modi Government

    வேளாண்துறையில் மூன்று புதிய சட்டத் திருத்தங்களை ஆளும் பாஜக அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020, வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020, அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகிய மூன்று சட்டங்களும் விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்கள் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.

    வேளாண் மசோதாக்கள் பற்றி எதிர்க்கட்சிகள் பொய் சொல்லிவருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி வந்தார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ஏற்க பல மாநில விவசாயிகள் தயாராக இல்லை. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்தனர்.

    Farmers who fought for years against Farm laws A timeline of the farmers’ protest

    விவசாயிகளின் ஓராண்டு கால போராட்டம் டைம் லைன்:

    கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி டெல்லி சலோ என்ற முழக்கத்துடன் தலைநகர் டெல்லிக்கு படையெடுத்துச் சென்றனர்.

    நவம்பர் 26,2020 நாளன்று விவசாயிகள் அனைவரும் டெல்லி எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகை வீசப்பட்டது. தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. பல விவசாயிகள் காயமடைந்தனர். டெல்லி எல்லைகளிலேயே விவசாயிகள் ட்ராக்டர்கள், வாகனங்களை வீடுகளாக்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். டெல்லியின் எல்லைகளான சிங்கு, திக்ரி, காஜிப்பூர் பகுதிகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்தனர்.

    நவம்பர் 28 ஆம்நாளன்று விவசாயிகளுடன் உள்துறை அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். ஜந்தர் மந்தர் பகுதியில் போரட அனுமதி கோரினர் விவசாயிகள். விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என்பதால் எல்லைப்பகுதிகளில் சாலைகளில் உணவுகளை சமைத்து சாப்பிட்டுக்கொண்டு போராட தொடங்கினர்.

    டிசம்பர் 03, 2020ஆம் நாளன்று விவசாயிகளுடன் அரசு முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது அது தோல்வியில் முடிந்தது. பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டத்தை திரும்ப பெறுவோம் என்று விவசாயிகள் உறுதியாக நின்றனர்.

    டிசம்பர் 08 ஆம் தேதியன்று பாரத பந்த் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்தனர். பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளோடு நாடு முழுவதுமுள்ள மற்ற மாநில விவசாயிகளும் போராட்டத்தில் பங்கெடுத்தனர். இதோடு நாடு முழுவதும் பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சில மாநிலங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த பாரத் பந்த்' போராட்டத்துக்கும் பல்வேறு விவசாயிகள் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தன.

    டிசம்பர் 21ஆம் தேதியன்று விவசாயிகள் அனைவரும் ஒருநாள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜனவரி 12,2021 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து சட்டங்களை ஆராய ஒரு குழுவை அமைத்தது.

    ஜனவரி 13, 2021 வேளாண் சட்ட நகல்களை தீ வைத்து எரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குடியரசு தினவிழாவில் டிராக்டர் பேரணி நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

    ஜனவரி 16, 2021, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளுக்கான மும்பை என்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொள்ள மற்ற மாநில விவசாயிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், ஏற்கெனவே குடியரசு தின விழா பேரணி அறிவிக்கப்பட்டதால் இதில் மகாராஷ்டிர மாநில விவசாயிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    ஜனவரி 26, 2021 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையை நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர் டெல்லி செங்கோட்டையில் ஏறி கொடியை ஏற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பல விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதும் வழக்குகளும் போடப்பட்டன.

    பிப்ரவரி 02, 2021 டெல்லிக்குள் விவசாயிகள் மீண்டும் நுழையாத வகையில் எல்லைகளில் 6 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டது. முள் கம்பி வேலிகள் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டதால் கடும் எதிர்ப்பு எழுந்தது.

    பிப்ரவரி 04, 2021 : பாடகர் ரிஹானா, போராளி கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப் போராட்டங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்க உலகளவில் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இதைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தன. இந்த நிலையில், சர்வதேச பிரபலங்களின் கருத்துக்கு எதிராக இந்தியப் பிரபலங்களான சச்சின் டெண்டுல்கர், அக்ஷய்குமார், அஜய் தேவ்கன், கௌதம் கம்பீர் போன்ற பலர் இந்தியாவின் உள்விவகாரங்களில் பிறர் தலையிடக் கூடாது என்று தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.

    பிப்ரவரி 06, 2021 ஆம் தேதி சக்காஜாம் என்ற போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்தனர். சக்கா ஜாம் என்பது சக்கரங்களை நிறுத்துதல் என்று பொருள். இன்றைய தினம் 3 மணிநேரம் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி ஸ்தம்பிக்க வைத்தனர்.

    பிப்ரவரி 13, 2021: விவசாயிகள் போராட்டம் பற்றி போராட்டம் குறித்து சர்வதேச சூழலியல் போராளி கிரேட்டா துன்பர்க் ட்வீட் செய்தது பல்வேறு சலசலப்புகளைக் கிளப்பியது. இதனிடையே கிரேட்டா துன்பர்க் பதிவு செய்த ஒரு ட்வீட்டில் டூல் கிட்' என்றொரு டாக்குமென்ட்டை ஷேர் செய்திருந்தார். அது வன்முறையையும் பிரிவினையையும் தூண்டும் வகையில் இருந்ததாகக் கூறி, டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. பெங்களூரு வந்த டெல்லி காவல்துறையினர், போராட்டங்கள் நடத்தும்போது, அதில் பங்கேற்பவர்கள் செய்ய வேண்டியவை குறித்து வெளியிடப்படும் ஆவணமான டூல் கிட்'டை உருவாக்கி விவசாயிகளுக்குப் பகிர்ந்ததற்காக திஷா ரவியைக் கைதுசெய்தனர்.

    டெல்லி எல்லைகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடைபெறும் பகுதியில் குடிநீர், இன்டர்நெட், மின்சாரம் உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்பட்டன. அதன் பிறகும் டெல்லி எல்லையில் போராட்டங்கள் தொடர்ந்தன. அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் எனப் பலரும் நேரில் சென்று விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு, போராடும் விவசாயிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. விவசாயிகள் அறுவடைக்குச் சென்றிருப்பதாகவும், அறுவடை முடிந்ததும் மீண்டும் போராட்டக் களத்தில் இணைவார்கள் என்றும் விவசாய சங்கங்கள் தெரிவித்தன. கொரோனா தடை உத்தரவையும் மீறி எல்லைகளில் போராட்டம் நீடித்தது.

    பல மாநிலங்களில் விவசாயிகள் பிரம்மாண்ட பேரணிகளையும் மகா பஞ்சாயத்துக்களையும் நடத்தினர். ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இந்த மகாபஞ்சாயத்தில் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் டிராக்டர் பேரணியும் நடத்தப்பட்டது.

    இதனிடையே போராட்டக்காரர்கள் முக்கியச் சாலைகளை முற்றுகையிட்டுப் போராடிவருகிறார்கள். இதனால் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. போராட்டக்காரர்களைச் சாலையிலிருந்து அகற்ற உத்தரவிட வேண்டும் என்று நொய்டாவைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். டெல்லியின் எல்லைகளான சிங்கு, திக்ரி, காஜிப்பூர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றியது டெல்லி போலீஸ்.

    மத்திய அரசு, எல்லைகளிலிருந்து விவசாயிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டால், நாடு முழுவதுமிருக்கும் அரசு அலுவலகங்கள் சந்தைகளாக மாறும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைட் கடந்த வாரம் எச்சரித்தார்.

    மத்திய அரசுக்கு, வரும் நவம்பர் 26ஆம் தேதி வரைதான் அவகாசம் இருக்கிறது. நவம்பர் 27ஆம் தேதியிலிருந்து, மீண்டும் அதிக அளவிலான விவசாயிகள் தங்கள் கிராமங்களிலிருந்து டிராக்டர்கள் மூலம் டெல்லி எல்லைகளை அடைவார்கள். போராட்டக் களத்தை மேலும் பலப்படுத்துவார்கள் என்றும் ராகேஷ் எச்சரித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் நவம்பர் 29ஆம் தேதி முதல் தினசரியும் 500 விவசாயிகள் பங்கேற்கும் டிராக்டர் பேரணி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    தமிழகத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படும் இந்த நாளில், பஞ்சாபில் குருநானக் ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது விவசாயிகளின் ஓராண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

    இந்த விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள் ஆயிரக்கணக்கான தங்களது நிலங்களையும் சொந்தங்களையும் விட்டுவிட்டு டெல்லியில் குளிர், மழை, வெயில் பாராமல் போரடியதற்கு வெற்றி கிடைத்துள்ளது. காலந்தாழ்ந்த அறிவிப்பு என்றாலும் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உயிர்நீத்த விவசாயிகளுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+