பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் வரி குறைவு.. பட்ஜெட்டில் சொன்ன நிதி அமைச்சர்.. விஷயம் இதுதான்!
டெல்லி: சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப்பதிவில் வரிச்சலுகை வழங்குவது தொடர்பாக மாநிலங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். பெண்களின் முன்னேற்றத்திற்கான இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒரு கோடி நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் மேம்பாட்டுக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படும் என இன்று மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மேலும், பத்திரப் பதிவு கட்டணங்களை மாநில அரசுகள் குறைக்க வலியுறுத்தப்படும் என்றும், அதிக பத்திரப் பதிவு கட்டணங்கள் வசூலிக்கும் மாநிலங்கள் கட்டணங்களைக் குறைப்பதற்கு ஊக்குவிக்கப்படும் என்றும், பெண்கள் பெயரில் வாங்கும் சொத்துகளுக்கு முத்திரைத் தீர்வையை குறைக்க திட்டங்கள் வகுக்க மாநிலங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன என்றும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சொத்துப் பதிவில் முக்கியப் பங்கு வகிக்கும் முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்கள் சொத்து வாங்கும் போது ஒருவர் செலுத்த வேண்டிய கட்டணம் ஆகும். சொத்து பரிவர்த்தனையின் போது முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்களை மாநில அரசு விதிக்கிறது. இந்தக் கட்டணங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
சொத்தின் வழிகாட்டுதல் மதிப்பின் அடிப்படையில் முத்திரைக் கட்டணம் கணக்கிடப்படுகிறது. சில மாநிலங்களில் பெண்களுக்கு முத்திரைக் கட்டணம் சற்று குறைவாக இருக்கும். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் சந்தை மதிப்புக்கு ஏற்ற வகையில் வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்தி வருகிறது.
இந்நிலையில் தான், பெண்கள் பெயரில் நிலம் பதிவு செய்யப்படும் போது முத்திரைத் தீர்வையை குறைக்கப் பரிசீலனை செய்ய மாநிலங்களைக் கேட்டுக் கொள்வதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். மாநில அரசுகள், பெண்கள் பெயரில் நிலம் பதிவு செய்தால் முத்திரை வரி உள்ளிட்ட பத்திரப் பதிவு கட்டணங்கள் குறைக்கப்படும் என முடிவு எடுத்தால் அந்தந்த மாநிலங்களில் உள்ள பெண்கள் பயன் பெறுவார்கள்












Click it and Unblock the Notifications