வக்பு வாரிய சிக்கலில் 1800 ஆண்டு பழமையான கோவில்.. ராஜ்யசபாவில் கொதித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
டெல்லி: வக்ஃப் வாரிய மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வக்பு வாரிய பிரச்சனையில் சிக்கிய 1800 ஆண்டு பழமை வாய்ந்த தமிழகத்தின் திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கோவில் பற்றி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.
வக்பு வாரிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்குப் பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.

நிர்மலா சீதாராமன் ஆக்ரோஷ பேச்சு
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ராஜ்யசபாவில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசுகையில், "தமிழ்நாட்டில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்திரசேகர சுவாமி கோவில் உள்ளது. இங்கு தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். 408 ஏக்கர் நிலம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இது எப்படி பிரச்சனைக்கு உள்ளானதாக மாறியது?
கிராம மக்கள், தங்களுக்குள் நிலங்களை வாங்கும் போதும், விற்பனை செய்யும்போதும், வக்ப் வாரியத்திடம் தடையில்லா சான்று பெற்று வர வேண்டும் என அவர்களிடம் கூறப்பட்டது. டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக, மாவட்ட கலெக்டர் தவறான தகவல்களை பதிவு செய்ததால், முழு கிராமமும் தவறான பதிவில் சேர்க்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கிராமவாசியும் தனது நிலம் தொடர்பாக ஏதேனும் செய்ய வேண்டி இருந்தால், அதற்கு வக்ப் வாரியத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டுமா? இது என்ன கதை
விஷயம் உண்மையாக இருந்தும், அதிகாரி தவறாக பதிவு செய்ததால், கிராம மக்கள் இந்த நிலைக்கு அலைக்கழிக்கப்பட்டனர். தங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என வக்ப் வாரியத்தால் கூற முடியாதா? ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. ஏழை மக்கள் தலைமுறை தலைமுறையாக அங்கு வசித்த போதும், அந்த நிலம் வேறு வக்பு வாரியத்துக்கு சொந்தமானது எனக் கூறினார்கள். மக்கள் தான் அலைச்சலை அனுபவித்தனர். அங்கு இருந்த கோவில்.. அதுவும் வக்ப் வாரியத்தால் கட்டப்பட்டதா?" என ஆவேசமாகப் பேசினார் நிர்மலா சீதாராமன்.
திருச்செந்துறை விவகாரம் - என்ன?
கடந்த 2022 ஆம் ஆண்டு திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள திருச்செந்துறை கிராமம் முழுதும் தமிழக வக்ப் வாரியம் தனக்கு சொந்தமானது எனக் கூறியது சர்ச்சைக்கு உள்ளானது. திருச்செந்துறை உள்ளிட்ட சில கிராமங்களில் உள்ள அனைத்து நிலங்களும் க்பு வாரியத்துக்குச் சொந்தமானவை. வக்பு வாரியத்தின் தடையில்லா சான்று பெறாமல், அங்குள்ள நிலங்களை விற்பனை செய்யவோ, பரிமாற்றம் செய்யவோ, அடமானம் வைக்கவோ எனத் தெரிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். மேலும், வக்ப் வாரியத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், கிராம மக்கள், வக்ப் வாரிய அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து, வக்பு வாரியம் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காததால், திருச்செந்துறையில் நிலங்கள் வாங்க, விற்க எந்த தடையும் இல்லை என்று கோட்டாட்சியர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications