மகளிர் இடஒதுக்கீடு: பேசுவதை விட செயல்படுத்துவது அவசியம்.. புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: மகளிர் மேம்பாடு என பேசிக்கொண்டிருப்பதை விட அதை செயல்படுத்துவது அவசியமாகிறது என்று புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கூறினார்.
நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. அவை கூடியதும் கூட்டத்தொடரில் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:- புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை உருவாக்கிய தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். நேருவிடம் கொடுக்கப்பட்ட தமிழகத்தின் செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டிருப்பது பெருமையளிக்கிறது.

விநாயகர் சதுர்த்தியில் புதிய மசோதாக்களை கொண்டு வருவது சிறப்பு வாய்ந்தது. நாடாளுமன்ற வரலாற்று நிகழ்வுகளை அறியும் வகையில் டிஜிட்டல் புத்தகம் இந்த புதிய நாடாளுமன்றத்தில் உள்ளது. புதிய நாடாளுமன்றத்திற்கு உங்கள் அனைவரையும் இதயப்பூர்வமாக வரவேற்கிறேன். பல வழிகளில் இது முன் எப்போதும் இல்லாத நிகழ்வு. அமிர்த காலத்திற்கான விடியல் இதுவாகும்.
மகளிர் மேம்பாடு என பேசிக்கொண்டிருப்பதை விட அதை செயல்படுத்துவது அவசியமாகிறது. அரசின் மசோதாக்களுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும். விண்வெளி உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் ஆதிக்கம் செலுத்துவது பெருமையளிக்கிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்த விவாதம் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகிறது.
அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அப்போது பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்றப்படவில்லை. அதனால், நமது கனவு நிறைவேறாமல் போனது. ஆனால், இன்று இதை முன்னெடுத்து செல்லும் வாய்ப்பை கடவுள் நமக்கு கொடுத்துள்ளார். நமது அரசாங்கம் புதிய மசோதாவை இன்று இருஅவைகளிலும் கொண்டு வரப்பட உள்ளது.
கொள்கைகள் வேறு வேறாக இருக்கலாம், ஆனால் நமது நோக்கம் நாடு முன்னேறி செல்ல வேண்டும் என்பதில் தான் இருக்க வேண்டும். கடந்த கால கசப்பான அனுபவத்தை மறந்து முன்னேற்றத்திற்கான பாதையில் பயணிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். தொடர்ந்து லோக்சபாவில் முதல் அலுவல் மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் நாளை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications