அவசர அவசரமாக டெல்லி சென்ற அண்ணாமலை.. பாஜக கூட்டணியில் ட்விஸ்ட்
டெல்லி: பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவசர பயணமாக டெல்லி சென்றுள்ளார். தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியிலும் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் அண்ணாமலை டெல்லி சென்றிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழ்நாடு அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் களம் காணுகின்றன. தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க பல்வேறு திருப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பாஜக கூட்டணி
திமுக கூட்டணி வலுவான நிலையில் உள்ளது. திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறது. மறுபக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுக பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு விரிசல்கள் நிலவி வருகின்றன. பாஜக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனின் அமமுக விலகிவிட்டது.
டிடிவி தினகரன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமிழக பாஜக தலைவர்கள் இடையேயும் மாறுபட்ட கருத்து நிலவி வருகிறது. முக்கியமாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நயினார் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக புகார் உள்ளது. அண்ணாமலை கோவையில் புதிய தோட்டம் வாங்கியது தொடர்பான தகவல்களை பாஜகவினர் தான் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை டெல்லி
இதனால் அண்ணாமலை கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். பாஜகவின் நிகழ்ச்சிகளிலேயே அவர் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு, சென்னையில் நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டங்களில் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. இதற்கு அண்ணாமலை தனிப்பட்ட காரணங்களை கூறி வந்தனர்.
ஆனால் அண்ணாமலை மன வருத்தம் காரணமாக தான் அதில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு பாஜக சார்பில் தவெக தரப்பு நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணாமலை அவசர பயணமாக இன்று காலை டெல்லி சென்றுள்ளார். கோவை விமான நிலையத்தில் இருந்து அவர் டெல்லி சென்றுள்ளார்.
ஆலோசனை
டெல்லியில் அவர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும் ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து தமிழ்நாடு அரசியல் களத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறுபக்கம் அண்ணாமலை மீதான புகார்களை விசாரிப்பதற்காக அவரை டெல்லி அழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜகவின் உள்கட்சி பூசல்களை சரிசெய்வது எப்படி என்று ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அண்ணாமலை டெல்லி பயணத்தில் மேலும் சில பாஜக முக்கிய புள்ளிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளாராம்.












Click it and Unblock the Notifications