டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்படுமா?..
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு மே 30 அன்று கைது செய்யப்பட்டார். இவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்த நிலையில், இன்றுடன் ஜாமீன் காலம் நிறைவடைகிறது. அவருக்கு ஜாமின் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சராக சத்யேந்தர் பணியாற்றி வந்த காலத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ இவர் மீது வழக்குப் பதிவு செய்தது. இதனை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை, இவர் மீதும் இவரது மனைவி உட்பட 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் விசாரணைக்கு சத்யேந்தர் ஜெயின் ஒத்துழைக்கவில்லை என்று கூறி அமலாக்கத்துறை கடந்த மே மாதம் இவரையும் இவரது நண்பர்கள் இரண்டு பேரையும் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தது.

உடல்நல பிரச்னை காரணமாக தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என ஜெயின் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த ஜாமீன் கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் கடைசியாக கடந்த மாதம் 19ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. அன்று மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் பேலா எம் திரிவேதி அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நவம்பர் மாதம் 6ம் தேதி (இன்று) வரை இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து இன்றுடன் ஜாமீன் காலகட்டம் முடிவடைகிறது. இந்நிலையில் இவரது ஜாமீன் காலகட்டத்தை நீட்டிக்கக்கோரி அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பான முடிவை இன்று நீதிமன்றம் எடுக்கிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா மற்றும் நீதிபதி பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வருகிறது. ஒருவேளை ஜாமீன் மறுக்கப்பட்டால் அவர் இன்று சிறைக்கு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications