ராகுல் காந்தி மிகவும் புத்திசாலியான.. தைரியமான தலைவர்! ஆர்பிஐ முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் பாராட்டு
டெல்லி: ராகுல் காந்தி மிகவும் புத்திசாலியான மற்றும் தைரியமான தலைவர் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ராகுல் காந்தியின் அரசியல் செயல்பாடுகள் நேர்மறையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. குறிப்பாக ராகுலின் பாரத் ஜடோ யாத்திரை, நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த லோக்சபா தேர்தல் காங்கிரசுக்கு மிக முக்கியமானதாகும். கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதபோது அக்கட்சியிலிருந்து பல தலைவர்கள் விலகி சென்றிருக்கிறார்கள். ஆட்சியிலிருந்த பல மாநிலங்களை காங்கிரஸ், ஆம் ஆத்மியிடமும் பாஜகவிடமும் இழந்திருக்கிறது. குஜராத்தில் அம்மாநில காங்கிரஸ் முதல்வராக இருந்த கேப்டன் அம்ரீந்த சிங், மிலிந்த் தியோரா, குலாம் நபி ஆசாத், பிரசாதா உள்ளிட்டோர் காங்கிரசிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இது தவிர தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டால், நேருக்கு இணையான தலைவராக உயர்ந்துவிடுவார். இதை காங்கிரஸ் விரும்பவில்லை. எனவே இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
இந்த முயற்சியின் ஓர் அங்கமாகதான் ராகுல் காந்தி பாரத் ஜடோ யாத்திரையை மேற்கொண்டார். கடந்த ஆண்டு 2022 செப்டம்பர் மாதம் 7ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜடோ யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், வழியாக 4,080 கிமீ பயணித்து 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைக் கடந்து ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்தது.
இந்த யாத்திரை முழுவதும் ராகுல் காந்தி, 12 பொதுக்கூட்டங்கள், 100க்கும் அதிகமான தெருமுனைக் கூட்டங்கள், 13 பத்திரிகையாளர்கள் சந்திப்பு, 275க்கும் அதிகமான திட்டமிடப்பட்ட நடைபயண உரையாடல்கள், 100க்கும் அதிகமான தனிஉரையாடல்கள் ஆகியவற்றில் பங்கேற்றார். இந்த யாத்திரை எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை கொடுத்தது. குறிப்பாக கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க இந்த யாத்திரை உதவியது.
இதனை தொடர்ந்து இதே போன்று பாரத் நியாய யாத்திரையை தொடங்கினார். இதில் 6,200 கிமீ தூரம் வரை பயணித்தார். மணிப்பூர், நாகாலாந்து, அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், பிஹார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பயணம் மேற்கொண்டார்.
மொத்தமாக இந்த யாத்திரையின் மூலம் 14 மாநிலங்களுக்கும் அதில் உள்ள 85 மாவட்டங்களுக்குச் சென்றார். ஆனால் பாரத் ஜோடோ போல் நடைபயணமாக இல்லாமல், இம்முறை பேருந்து மூலம் யாத்திரை நடத்தப்பட்டது.
இப்படியாக லோக்சபா தேர்தலுக்காக முழுவீச்சில் களமிறங்கிய ராகுல் காந்தி தன்னை முன்னிறுத்துவதோடு நிறுத்திக்கொள்ளாமல், கூட்டணி கட்சித் தலைவர்களையும் முன்னிறுத்தியது பிளஸ் பாயிண்டாக பார்க்கப்பட்டது.
இப்படி இருக்கையில்தான் ராகுல் காந்தி குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பெருமிதம் தெரிவித்திருக்கிறார். தனியார் செய்தி ஊடகத்திற்கு நேர்காணல் அளித்திருந்த ராகுராம் ராஜன், "ராகுல் காந்தி மிகவும் புத்திசாலியான மற்றும் தைரியமான தலைவர்" என்று கூறியுள்ளார்.
"ராகுல் காந்தி சிந்திக்கும் மற்றும் வழிநடத்தும் திறன் இல்லாத ஒருவராக சித்தரிக்கப்படுகிறார். இது தவறான சித்தரிப்பு. இந்த சித்தரிப்புக்கு நேர் எதிராக அவர் இருக்கிறார் என்பதுதான் உண்மை. மிகவும் புத்திசாலியான மற்றும் தைரியமான தலைவர்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications