அசத்தல்.. 5 லட்சம் பேருக்கு "இலவச சுற்றுலா விசா.." நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
டெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, "இலவச சுற்றுலா விசா" திட்டத்தை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார்.
ஒரு நாட்டின் வளர்ச்சியில் சுற்றுலா துறைக்கு முக்கிய பங்கு உள்ளது. நேரடியாக சுற்றுலா பயணிகளால் கிடைக்கும் வருமானம் மட்டும் கிடையாது, சுற்றுலாப்பயணிகளை நம்பி பல்வேறு தொழில் நிறுவனங்களும், போக்குவரத்து நிறுவனங்களும் வருவாய் ஈட்டுகின்றன.
எளிதாக பொருளாதாரத்தை வேகப்படுத்த சுற்றுலா துறைக்கு ஊக்கம் கொடுத்தால் போதுமானது என்பது பொருளாதார வல்லுனர்கள் கருத்து.

பல துறை வளர்ச்சி
ஹோட்டல், ரிசார்ட் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் சுற்றுலா துறையின் வளர்ச்சியை நம்பித்தான் இருக்கின்றன. இந்த நிலையில்தான் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் சுற்றுலா துறை வளர்ச்சிக்காக அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்தார்.
5 லட்சம் பேருக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் என்றார் அவர்.

நிறைய வருமானம்
2019ஆம் ஆண்டு ஒரு கோடியே 10 லட்சம் அளவுக்கு சுற்றுலாப்பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். சுமார் 31 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு அவர்களால் வருவாய் கிடைத்துள்ளது. சர்வதேச சுற்றுலா பயணிகள் சராசரியாக 21 நாட்கள் இந்தியாவில் தங்குகிறார்கள். அவர்கள் சராசரியாக தினமும் இந்திய மதிப்பில் 2,400 ரூபாய் அளவுக்கு செலவு செய்கிறார்கள்.

கட்டணம் இல்லாத விசா
இது உள்நாட்டு பொருளாதாரத்திற்கும், வேலை வாய்ப்புக்கும் உதவியாக இருக்கிறது. எனவே இந்தியாவில் சுற்றுலா விசா வழங்கப்பட ஆரம்பிக்கும்போது முதல் ஐந்து லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் வாங்காமல் விசா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

விசா வழங்கும் பணி
தற்போது ஊரடங்கு காரணமாக சுற்றுலா விசா வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அது வழங்கப்பட ஆரம்பித்ததும் இந்த சலுகை காரணமாக பல நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமாக விண்ணப்பம் செய்வார்கள் என்று மத்திய அரசு எதிர்பார்த்து இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

ரூ.100 கோடி செலவு
ஒரு சுற்றுலா பயணிக்கு ஒரு முறை மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும். இதற்காக மத்திய அரசுக்கு 100 கோடி ரூபாய் வரை செலவு பிடிக்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications