இலவசங்கள், மக்கள் நலத் திட்டங்கள் வெவ்வேறானவை- பொருளாதாரம் பாதிக்கப்படவும் கூடாது: உச்சநீதிமன்றம்
டெல்லி: இலவசங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் என்கிற இரண்டும் வெவ்வேறானவை; மக்கள் நலத் திட்டங்களை பொருளாதாரம் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளின் இலவசங்களுக்கு எதிராகவும் இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் அஸ்வினி குமார் உபாத்யாயா வழக்கு தொடர்ந்தார். ஆனால் இப்படியான ஒரு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் மனுத் தாக்கல் செய்தன.
இவ்வழக்கில் ஏற்கனவே தேர்தல் ஆணையம் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். இதனை ஏற்று தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் ஒன்றையும் தாக்கல் செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை இன்று விசாரித்தது.
இன்றைய விசாரணையின் போது இலவசங்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்வைத்த கருத்துகளின் தொகுப்பு:

- இலவசங்கள் தொடர்பான அரசியல் கட்சிகள் அறிவிப்புகள், இலவசங்களை வழங்குதல் என்பது தீவிரமான பிரச்சனைதான்.
- இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்வது என்பது ஜனநாயக விரோதம்; அதனை பரிசீலனை செய்ய முடியாது
- இலவசங்களுக்கான நிதியை கட்டமைப்பு பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யலாம்.
- இதை கொடுங்கள்- அதை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிடுவதை இந்தியா போன்ற நாட்டில் செயல்படுத்த முடியாது .
- ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் போது பொருளாதார நிலைமை தெரியாது; ஏதேனும் செய்வதற்காக தவறாக செய்யவும் கூடாது.
- பொருளாதார இழப்பு, மக்கள் நலன் திட்டங்கள் இரண்டையும் சமன்படுத்த வேண்டும்; இரண்டும் சமநிலையில் இருக்க வேண்டும்
- இலவசங்கள், மக்கள் நலத் திட்டங்கள் இரண்டும் வெவ்வேறானவை; இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது.
- பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
- இலவசங்கள் உயிர்களைக் காக்கக் கூடியதாகவும் இருக்கின்றன.
- இலவசங்களை வரைமுறைப்படுத்த மத்திய அரசுதான் சட்டங்களை இயற்ற வேண்டும்.
இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பெஞ்ச் தெரிவித்தது. மேலும் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 17-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications