"உடனே ரூ.1,700 கோடி செலுத்துங்கள்.." வருமான வரித்துறை பரபர நோட்டீஸ்... காங்கிரஸ் ஷாக்!
டெல்லி: காங்கிரஸ் கட்சி வருமான வரி மற்றும் அபராதம் என மொத்தம் ₹1,700 கோடி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
லோக்சபா தேர்தல் இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கிறது. இதற்காக நாடு முழுக்க உள்ள அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சியால் பிரச்சாரம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது,

காங்கிரஸ் கட்சி வருமான வரி தாக்கல் செய்ததில் பிரச்சினை இருப்பதாகக் கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இது தேர்தல் காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்துள்ளது.
ரூ. 1700 கோடி: கடந்த பிப்ரவரி மாதம் தான் வருமானவரித் துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் வருமான வரி கணக்குகளில் தவறுகள் இருப்பதாகக் கூறி ரூ.200 கோடி அபராதம் விதித்து இருந்தது. காங்கிரஸ் நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும் என்ற வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், அவர்களின் கணக்குகளை முடக்கியது. இந்தச் சூழலில் தான் இப்போது ரூ.1700 கோடி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வருமான வரித்துறை நோட்டீஸை எதிர்த்துத் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது. அந்த மனு தள்ளுபடி செய்த மறுநாளே காங்கிரஸுக்கு வருமான வரித்துறையிடம் இருந்து ₹1,700 கோடி நோட்டீஸ் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2017-18 முதல் 2020-21 வரையிலான ஆண்டுகளுக்கான வருமான வரி மற்றும் அபராதம் ஆக இந்த ₹1,700 கோடியைச் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
காங்கிரஸ் பதிலடி: இதற்கிடையில், வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சி, அரசு அமைப்புகளை பாஜக குண்டர்கள் போலப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி தருவதாகச் சாடியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், "தேர்தலுக்கு முன் காங்கிரஸைத் திவாலாக்க மோடி அரசு திட்டமிட்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு பொதுவாக வரி விலக்கு இருக்கிறது. ஆனால், ரிட்டன் தாக்கல் செய்வதில் தாமதம் என்று சொல்லி இந்த அபராதத்தை விதித்து உள்ளனர். இது காங்கிரஸை நிதி ரீதியாக முடக்கும் மோடி அரசு மேற்கொள்ளும் அப்பட்டமான ஒரு நடவடிக்கை. தேர்தல் நேரத்தில் எங்களைச் செயல்பட விடாமல் முடக்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற அச்சத்தில் அவர்கள் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸை முடக்க இதுபோல செய்கிறார்கள்" என்றார்.
காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "தேர்தல் பத்திர ஊழல் மூலம் ப்ரீபெய்ட் லஞ்சம், போஸ்ட்பெய்டு லஞ்சம், ரெய்டுக்கு பிந்தைய நன்கொடை என்று பல்வேறு வழிகளை அவர்கள் பின்பற்றினார்கள். இப்போது தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த ரூட்டை எடுத்துள்ளார்கள்" எனச் சாடினார்.
போராட்டம் நடத்தத் திட்டம்: மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பாஜக பயன்படுத்துவதைக் கண்டித்து நாடு முழுக்க போராட்டம் நடத்தக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, ஐநா சபை ஆகியவையும் கூட கருத்து கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications