மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு
டெல்லி: கேஸ் சிலிண்டர் சப்ளை, அதிலும் குறிப்பாக வர்த்தக பயன்பாடு கேஸ் சிலிண்டர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவின. இது தொடர்பாக சில அமைப்பினர் வெளிப்படையாகவே கவலையும் தெரிவித்திருந்தனர். ஹோட்டல்களும் இதனால் மூடப்படுவதாகச் சொல்லப்பட்டது. இதற்கிடையே மத்திய அரசு இது தொடர்பாக முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழல் காரணமாகக் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சப்ளையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டு இருப்பதாக திடீரென குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதிலும் குறிப்பாக வர்த்தக பயன்பாடு கேஸ் சிலிண்டர் சப்ளையில் பாதிப்பு இருப்பதாகப் பலரும் சொன்னார்கள். இதற்கிடையே மத்திய அரசு இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது.

எல்பிஜி பற்றாக்குறை
அதாவது நாட்டில் எல்பிஜி பற்றாக்குறை இல்லை என்றும், விநியோகம் சீராகிவிட்டது என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. நாடு முழுக்க பல்வேறு பகுதிகளிலும் கேஸ் சிலிண்டர் விநியோகம், குறிப்பாக வர்த்தக பயன்பாடு சிலிண்டர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலைகள் எழுந்த நிலையில், மத்திய அரசு இந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
உற்பத்தி அதிகரிப்பு
இது தொடர்பாக முன்கூட்டியே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் அதன்படி சுத்திகரிப்பு ஆலைகள் ஏற்கனவே எல்பிஜி உற்பத்தியை சுமார் 10% வரை அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பதுக்கல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கக் கூடுதல் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
எல்பிஜி விநியோகத்தில் உள்ள குறைபாடுகளைச் சரிபார்க்கவும், போதுமான விநியோகத்தை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே புக்கிங் காலம் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பதுக்கலைத் தடுக்க அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்' பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கல்
மத்திய அரசு அதிகாரிகள் மேலும் கூறுகையில் "கேஸ் சிலிண்டர் சப்ளை தொடர்பாகத் தற்காலிக சிக்கல்கள் இருந்தன. ஆனால், இப்போது நிலைமை சீராகிவிட்டது. கேஸ் சிலிண்டர் சப்ளை எந்தவொரு சிக்கலும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கேஸ் ஆலைகளும் 100% திறனுடன் செயல்படுகின்றன. உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி அழுத்தங்களால் ஏற்பட்ட தடங்கல்கள் இருந்த போதிலும், எரிசக்தி விநியோகத்தை நிர்வகிப்பதில் இந்தியா பல நாடுகளை விடச் சிறந்த நிலையில் உள்ளது" என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவின் எரிசக்தி சப்ளையில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதை உறுதி செய்ய இந்திய அரசு அதிகாரிகள் பல நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். சர்வதேச சப்ளையர்களுடன் அமைச்சகங்களும் எரிசக்தி நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, விநியோகச் சங்கிலியில் எந்தத் தடங்கலும் ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக்கொள்கின்றன. இந்தியாவில் எரிசக்தி சப்ளையில் எந்தவொரு சிக்கலும் வராது என்றும் நிலைமையைச் சமாளிக்கத் தயாராக உள்ளோம் என்பதே அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.
பீதி வேண்டாம்
மேலும், சரிபார்க்கப்படாத சமூக வலைத்தள தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அத்தகைய தகவல்கள் தேவையற்ற பீதியை உருவாக்கலாம் என்றும் அரசு பொதுமக்களை வலியுறுத்தியது. தற்போதைய சூழலில் குடும்பப் பயன்பாட்டுக்கான எல்பிஜி விநியோகம் அரசின் முன்னுரிமையாக உள்ளது. வர்த்தக எல்பிஜி சப்ளையில் இருக்கும் சிக்கல்களையும் சவால்களையும் சரி செய்ய அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தாலும் கூட அதிலும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.
கேஸ் சிலிண்டர் சப்ளையில் பற்றாக்குறை இருப்பதாக சில அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன. அது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அதிகாரிகள். "அவர்கள் சப்ளை நிலவரம் தெரியாமலும் சிலர் விளம்பரத்திற்காகவும் இதுபோன்ற கடிதங்களை எழுதுகிறார்கள். ஆனாலும், அவர்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்கிறோம். இப்போது வரை சப்ளையி்ல எந்தவித நெருக்கடியும் இல்லை. தேவைக்கேற்ப சப்ளை இறுக்கும். அதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications