அந்த 3 வார்த்தை.. கவுதம் கம்பீருக்கு இமெயிலில் கொலை மிரட்டல்! குடும்பத்துக்கே பாதுகாப்பு கோரி மனு
டெல்லி: பாஜகவின் முன்னாள் எம்பியும், தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருமான கவுதம் கம்பீருக்கு இ-மெயில் வழியாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த கவுதம் கம்பீர் பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்த மறுநாள் மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் இ-மெயிலில் இருந்த 3 வார்த்தைகளால் பதறிப்போன கவுதம் கம்பீர் தனக்கு மட்டுமின்றி குடும்பத்தினருக்கே பாதுகாப்பு கோரி போலீசில் புகார் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். இவர் ஓய்வுக்கு பிறகு பாஜகவில் சேர்ந்தார். பாஜக சார்பில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்பியானார்.

அதன்பிறகு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படாது என்று கட்சி மேலிடம் கூறியது. இதையடுத்து அவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த தொடங்கினர்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் கவுதம் கம்பீருக்கு இ-மெயில் மூலம ்கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கொலை மிரட்டல் என்பது ‛ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ என்ற பெயரில் வந்துள்ளது. அதில், ‛I Kill You’ என்று 3 வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து கவுதம் கம்பீர் டெல்லி போலீசில் முறைப்படி புகார் அளித்தார். அதில் கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி தனக்கும், தனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளார். வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
காஷ்மீரில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான ‛தி ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட்'என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.
இந்த தாக்குதலுக்கு நேற்று முன்தினமே கவுதம் கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛இறந்தவர்களின் குடும்பத்துக்காக பிரார்த்தனை செய்கிறேன். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் அதற்கான விலையே கொடுத்தே ஆக வேண்டும். இந்தியா பதிலடி கொடுக்கும்'' என்று கூறியிருந்தார். இந்த பதிவை தொடர்ந்து தான் அவருக்கு இ-மெயிலில் 2 முறை மிரட்டல் வந்துள்ளது.
அதேபோல் கவுதம் கம்பீருக்கு இப்படி இ-மெயிலில் கொலை மிரட்டல் வருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கடந்த 2021 நவம்பர் மாதத்தில் கவுதம் கம்பீர் பாஜக எம்பியாக இருந்தார். அப்போது அவருக்கும் இ-மெயிலில் கொலை மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications