எங்க நாட்டில் இதற்கு வாய்ப்பே இல்லை.. இந்தியாவை வியந்து பாராட்டிய ஜெர்மனி அமைச்சர்.. என்ன மேட்டர்
டெல்லி: இந்தியாவில் யுபிஐ பேமெண்ட் முறை மிகவும் பாபுலரான ஒன்றாக இருக்கிறது. இதற்கிடையே நமது நாட்டின் இந்த டிஜிட்டல் பேமெண்ட் முறைகளைப் பார்த்து ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னாலெனா பேர்பாக் வியந்து போய் பாராட்டியுள்ளார். மேலும், ஜெர்மனியில் இதற்கெல்லாம் சாத்தியமே இல்லை என்றும் கூறியுள்ளார்.
யுபிஐ எனப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் கடந்த 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு இந்தியாவில் மிக பெரிய வரவேற்பு இருக்கிறது.

பாராட்டு: ஒவ்வொரு ஆண்டும் இந்த யுபிஐ முறையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே நமது யுபிஐ பேமெண்ட் முறையைப் பார்த்து ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னாலெனா பேர்பாக் வியந்து பாராட்டி இருக்கிறார். மேலும், யுபிஐ என்பது அதிவேக பேமெண்ட்களை சாத்தியமாக்கி உள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
பெர்லினில் நடந்த வருடாந்திர தூதர்கள் மாநாட்டில் ஒரு அமர்வில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னாலெனா பேர்பாக் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தூதராக இருந்த காலத்தை நினைவு கூர்ந்த அவர், பெட்டிக் கடையில் மளிகைப் பொருட்களையும் கூட மக்களால் எளிதாக யுபிஐ மூலம் வாங்க முடிந்ததைப் பார்த்து வியந்ததாகத் தெரிவித்தார்.
யுபிஐ: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் டெல்லியில் இருந்தபோது யுபிஐ குறித்து முதல்முறையாகக் கேள்விப்பட்டேன். டெல்லி மெட்ரோவை பயன்படுத்தினேன்.. நான் உங்கள் மெட்ரோவைப் பயன்படுத்தினேன். ரொம்பவே நவீனமாக இருந்தது. மக்கள் தெருவோர மளிகைக் கடைகளிலும் கூட யுபிஐ மூலம் பணம் செலுத்துவதை அப்போது தான் முதல்முறையாகப் பார்த்தேன். யுபிஐ முறையைக் கண்டு வியந்து போனேன்.
யுபிஐ என்பது மிகச் சிறந்த உடனடி டிஜிட்டல் கட்டண முறையாக இருக்கிறது. எங்கள் ஜெர்மனியில் எல்லாம் இதற்குச் சாத்தியமே இல்லை. ஆனால் நாங்கள் இதை உன்னிப்பாகக் கவனித்தோம். ஜெர்மனியிலும் இதுபோன்ற பேமெண்ட்களை நவீனமயமாக்க நடவடிக்கை எடுத்தோம். எங்கள் சொந்த வேகத்துடன் ஒப்பிடும்போது நாங்கள் பெரிய ஜம்ப் செய்தோம். பேமெண்ட்களில் டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகர்ந்து வருகிறோம்.
ஜெர்மனியின் நிலை: ஷாப்பிங் மால்கள் மட்டுமின்றி தெருவொரு பெட்டிக் கடைகளிலும் டிஜிட்டல் முறையில் பேமெண்ட்டை சாத்தியமாக்க முடியும் என்பதை இந்தியா நமக்குக் காட்டியுள்ளது. அதேநேரம் துரதிர்ஷ்டவசமாக எங்கள் தூதரகத்தில், இன்னுமே கூட விசா விண்ணப்பப் படிவங்களை ஒரு பெட்டியில் போட்டு எடுத்துச் செல்ல வேண்டிய சூழலே இருக்கிறது.
அப்போது தான் நான் உணர்ந்தேன்.. என்னால் தெருவோர கடைகளில் உடனடியாக டிஜிட்டல் பேமெண்ட்களை சப்போர்ட் செய்ய வைக்க முடியாது. ஆனால், எனது அமைச்சகத்தின் கீழ் இருக்கும் பணிகளை டிஜிட்டல் மயமாக்கல் செய்ய முடியும் என நம்பினேன். அதன்படியே நடவடிக்கை எடுத்து வருகிறேன்" என்றார்.
முதல்முறை இல்லை: அவரது இந்த பேச்சு இப்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதேநேரம் நமது நாட்டின் யுபிஐ முறைகளைக் கண்டு, ஜெர்மனி நாட்டின் அமைச்சர் ஒருவர் வியந்து பேசுவது இது முதல்முறை இல்லை. கடந்த ஆண்டு, ஜெர்மனியில் போக்குவரத்து அமைச்சராக இருக்கும் வோல்கர் விஸ்சிங், இந்தியா வந்திருந்தார். இங்கு அவர் யுபிஐ முறை எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்த்து அவர் வியந்து போனார். அவரும் இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் முறையைப் பார்த்து வியந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications