காங். நாசமாக காரணமே ராகுல் காந்திதான்..அந்த பேப்பரை கிழிச்ச சம்பவம் போதுமே.. குலாம்நபி ஆசாத் குமுறல்
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ராகுல் காந்திதான் கட்சியின் அழிவுக்கு காரணம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி முதல் அடிப்படை கட்டமைப்பு வரை மறுசீரமைப்பு தேவை என்பது மூத்த தலைவர்கள் பலரது குரல். இந்த குரலை வெளிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு 23 தலைவர்கள் கூட்டாக கடிதம் அனுப்பினர். ஜி23 தலைவர்கள் என இன்றளவும் அந்த தலைவர்கள் அழைக்கப்பட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கலகக் குழுவான இந்த 23 தலைவர்கள் கோஷ்டிக்கு குலாம் நபி ஆசாத் தலைவராக செயல்பட்டு வந்தார். அப்போதே இந்த குழு பாஜகவின் தூண்டுதலால் செயல்படுவதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் விமர்சித்தனர். இந்த கலகக் குரல் சம்பவத்துக்குப் பின்னர் காங்கிரஸ் மேலிடத்துக்கும் குலாம்நபி ஆசாத்துக்குமான இடைவெளி அதிகரித்தது.
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட போது அம்மாநில முன்னாள் முதல்வர்கள் அத்தனை பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் காஷ்மீர் முன்னாள் முதல்வரான குலாம்நபி ஆசாத் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. அதனால் அவர் பாஜகவுடன் நெருக்கமானவர் என்கிற விமர்சனம் வந்தது.

பாஜக ஆதரவு நிலை?
இதன்பின்னர் குலாம்நபி ஆசாத்துக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி. பதவி தரவும் காங்கிரஸ் மேலிடம் மறுத்தது. குலாம்நபி ஆசாத்துக்கு ராஜ்யசபாவில் பிரியா விடை அளித்த போது, பிரதமர் மோடிதான் உருக்கமாக பேசினார். ஆனால் அந்தப் பேச்சை காங்கிரஸ் எம்.பி.க்கள் ரசிக்கவில்லை. அப்போது குலாம்நபி ஆசாத்துக்கு பாஜக, துணை ஜனாதிபதி பதவி தரப் போவதாக பேச்சுகள் எழுந்தன. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

குலாம் நபி விலகல் அறிவிப்பு
அண்மையில் காங்கிரஸ் மேலிடத்துடன் இணக்கமாக போக்கை குலாம்நபி ஆசாத் வெளிப்படுத்தி இருந்தார். இதையடுத்து காஷ்மீர் காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் இதனை ஏற்க மறுத்தார் குலாம்நபி ஆசாத். தற்போது ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார் குலாம்நபி ஆசாத்.

ராகுல் மீது விமர்சனம்
இது தொடர்பாக சோனியா காந்திக்கு விரிவான கடிதம் ஒன்றை குலாம்நபி ஆசாத் எழுதியுள்ளார். அதில் ராகுல் காந்திதான் காங்கிரஸின் அத்தனை அழிவுக்குமே காரணம் என கடுமையாக விமர்சித்திருக்கிறார். குலாம்நபி ஆசாத், ராகுல் காந்தி குறித்து எழுதியிருப்பதாவது: 2013-ம் ஆண்டு காங்கிரஸில் ராகுல் நுழைந்தது முதல் அதுவரையிலான காங்கிரஸ் கட்சியின் அத்தனை கட்டமைப்புகளும் சீரழிவுக்குள்ளாக்கப்பட்டன. 2013-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டார். அப்போது முதலே அத்தனை அனுபவம் வாய்ந்த தலைவர்களும் ஓரம்கட்டப்பட்டனர். அனுபவே கிஞ்சித்தும் கிடையாதவர்கள்தான் காங்கிரஸ் கட்சியில் தீர்மானிக்கும் சக்திகளாகினர். ராகுல் காந்தி, அவரது பாதுகாவலர்கள், பி.ஏ.க்கள்தான் அத்தனை முக்கிய முடிவுகளையும் எடுக்கின்றனர்.

தோல்விக்கு ராகுல் காரணம்
2013-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் அவசர சட்டத்தை ராகுல் காந்தி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கிழித்து வீசி எறிந்தார் ( கிரிமினல் எம்.பி. எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கலாம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது; அப்போது கிரிமினல் எம்.பி, எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் வகையில் மன்மோகன்சிங் அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது- அதை ராகுல் கிழித்து எறிந்திருந்தார்). அந்த ஒரே ஒரு சம்பவமே அவரது சிறுபிள்ளைத்தனத்தை வெளிப்படுத்துகிறது. 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடையவும் அதுவும் முக்கிய காரணம். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கட்சியை சீரமைக்க முன்வைக்கப்பட்டபரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன. இந்த பரிந்துரைகள் 9 ஆண்டுகளாக இன்னமும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு குலாம்நபி ஆசாத், ராகுலை சாடி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications