ஒடிசா 3 ரயில்கள் மோதிய விபத்து எதிரொலி! கோவா- மும்பை வந்தே பாரத் ரயில் தொடக்க விழா ரத்து
டெல்லி: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று ரயில்கள் ஒடிசாவில் விபத்தில் சிக்கியுள்ள நிலையில், நாளை நடக்க இருந்த கோவா- மும்பை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான ஒரு விபத்து அரங்கேறியுள்ளது. 12841 எண் கொண்ட இந்த ரயில் ஒடிசா, ஆந்திரா வழியாகச் சென்னை வந்தடையும்.

மேற்கு வங்கத்தில் கொல்கத்தா அடுத்துள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து இன்று கோரண்டல் எக்ஸ்பிரஸ் புறப்பட்டுள்ளது. வழக்கம் போல இந்த ரயில் மாலை 3.20 மணிக்கு ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியது.
இந்த ரயில் மாலை பாலசோர் மாவட்டத்தில் வரும் போது மோசமான விபத்து நடந்துள்ளது. பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது கோரமண்டல் ரயில் தடம் புரண்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இப்படி தடம் புரண்ட பெட்டிகள் எதிரே இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அங்கே வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் இதில் மோதி தடம் புரண்டுள்ளது.
இது மட்டுமின்றி லூப் டிராகில் இருந்த மற்றொரு சரக்கு ரயிலும் இந்த விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்குத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரம் என்பதாலும் வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இந்த விபத்தால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே ரயில் விபத்தைத் தொடர்ந்து கோவா-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விழா மட்கான் நிலையத்தில் நாளை நடைபெற உள்ள நிலையில், இது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை சனிக்கிழமை காலை கோவா-மும்பை வந்தே பாரத் விரைவு ரயிலைக் காணொலி மூலம் கொடியசைத்துத் துவக்கி வைக்க இருந்தார். இதன் காரணமாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மட்கான் நிலையத்தில் வந்திருந்தார்.
இந்த நேரத்தில் இந்த கோர விபத்து நடந்துள்ளதால் வந்தே பாரத் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் வைஷ்ணவ் இப்போது ஒடிசாவில் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications