மாநில அரசுகளுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி இலவசம் - மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும். மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக தரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,46,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,66,10,481ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,19,838 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் மொத்தமாகக் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,38,67,997 என்றளவில் உள்ளது. தற்போது நாடு முழுவதும் 25,52,940 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை கொரோனாவுக்கு நாடு முழுவதும் 1,84,657 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,104 பேர் பலியாகினர். இதுவரை மொத்தம் 13,83,79,832 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக சீரம் மருந்து நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் மருந்து நிறுவனங்களிடம் இருந்து மருந்து கொள்முதல் செய்யப்பட்டது.
நாடு முழுவதும் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது. மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மாநில அரசுகள் தடுப்பூசியை கொள்முதல் செய்து கொள்ளலாம் எனவும் அனுமதித்துள்ளது.
இந்தநிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் சீரம் நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது. மத்திய அரசுக்கு ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பல மாநிலங்கள் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும் என அறிவித்துள்ளது. இந்த நிலையில் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தன. மாநில அரசுகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும். மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் ரூ.150க்கு கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications