சூப்பர் சம்பவம்.. கொரோனா வேக்சின் போட்டவர்களுக்கு... குட் நியூஸ் சொன்ன அமைச்சர் மன்சுக் மாண்டவியா
டெல்லி: அமெரிக்கா, பிரிட்டன் உட்பட மொத்தம் 96 நாடுகள் இந்தியாவின் வேக்சின் சான்றிதழை ஏற்றுக்கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
உலகில் எந்த நாட்டிலும் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. தொடர்ந்து கொரோனா உருமாறிக் கொண்டே இருப்பதால் வைரஸ் பாதிப்பை ஒழிப்பது சவால் நிறைந்ததாக மாறியுள்ளது
தற்போதைய சூழலில் கொரோனா வேக்சின் பணிகள் மட்டுமே இதற்கான ஒரே தீர்வாகப் பார்க்கப்படுகிறது. வேக்சின் உற்பத்தியும் அதிகரித்துள்ள நிலையில் அனைத்து நாடுகளும் தடுப்பூசி பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

வேக்சின் பணிகள்
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் வேக்சின் பணிகள் முதலில் தொடங்கப்பட்டது. இருப்பினும், வேக்சின் அச்சம், உற்பத்தி பற்றாக்குறை, ஏற்றுமதி உள்ளிட்ட பல காரணங்களால் முதல் சில மாதங்கள் வேக்சின் பணிகள் வேகம் எடுக்கவில்லை. இருப்பினும், அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு வேக்சின் பணிகள் மெல்ல வேகம் பெற்றது. இந்த ஆண்டிற்கு முடிந்தவரை அனைத்து இந்தியர்களுக்கும் வேக்சின் செலுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

96 நாடுகள்
இருப்பினும், இடையில் சில நாடுகள் இந்தியாவின் வேக்சின் சான்றிதழ்களை ஏற்காமல் இருந்தது. வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கு இதைச் சிரமத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் இந்தியாவின் வேக்சின் சான்றிதழை 96 நாடுகள் ஏற்றுக்கொள்வதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மொத்தம் 96 நாடுகள் இந்தியாவின் வேக்சின் சான்றிதழ்களை ஏற்கின்றன. கோவிஷீல்டு அல்லது உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த வேக்சின்கள் அல்லது தேசிய அளவியில் அங்கீகரிக்கப்பட்ட வேக்சின்களை உலக நாடுகள் ஏற்கின்றன" என்று தெரிவித்துள்ளார்.

நாடுகள் பட்டியல்
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, வங்கதேசம் உள்ளிட்ட 96 நாடுகள் தற்போது இந்தியாவின் வேக்சின் சான்றிதழ்களை அங்கீகரிக்கின்றன. மேலும் அவர், "இந்த 96 நாடுகளும் கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டையும் அங்கீகரித்துள்ளன. நாடுகளின் முழு பட்டியலைக் கோவின் தளத்தில் அறிந்து கொள்ளலாம். அதேபோல தற்போது வரை இந்தியாவில் 109 கோடி வேக்சின்கள் செலுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வேக்சின் போடும் பணிகளும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

உலக நாடுகள்
வரும் நவம்பர் 22ஆம் தேதி முதல் கோவக்சின் செலுத்தியவர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் எனப் பிரிட்டன் அறிவித்திருந்த நிலையில், மத்திய அமைச்சர் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த நவம்பர் 3ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல அமெரிக்காவும் நவ. 8ஆம் தேதி முதல் வெளிநாட்டினருக்கு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எப்போது இயல்பு நிலை
உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது வேக்சின் பணிகளையே தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பியாவில் சில நாடுகள் பூஸ்டர் டோஸ் பணிகளையும் தொடங்கிவிட்டன. வேக்சினுக்கும் இதுவரை பெரியளவில் பற்றாக்குறை ஏற்படவில்லை என்பதால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் கொரோனாவுக்கு முந்தைய இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசிகள் உயிரிழப்பை 90% மேல் குறைப்பதால் பொதுமக்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும் எனச் சுகாதாரத் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்,












Click it and Unblock the Notifications