"அடிச்சது பாருங்க அதிர்ஷ்டம்.." 1994இல் ரூ.500க்கு வாங்கிய எஸ்பிஐ பங்குகள்.. இப்போ 750 மடங்கு லாபம்
டெல்லி: சண்டிகரில் வசிக்கும் மருத்துவர் ஒருவர் தனது தாத்தா வாங்கிய எஸ்பிஐ பங்கு சான்றிதழை கண்டுபிடித்துள்ளார். அப்போது வெறும் ரூ.500 கொடுத்து வாங்கிய அந்த பங்குகளின் மதிப்பு இப்போது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
சண்டிகர் பகுதியில் வசிக்கும் மருத்துவர் ஒருவர் தனது தாத்தா செய்த சில பழைய முதலீடுகள் குறித்த கருத்துகளை பகிர்ந்துள்ளார். குழந்தை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தன்மய் மோதிவாலா வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அவர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்கு சான்றிதழாகும். அதென்ன பங்கு சான்றிதழ் என்ற குழப்பம் வேண்டாம். பங்கு சான்றிதழ் என்றால் என்ன என்றும் அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பங்கு சான்றிதழ்: இப்போது நாம் பங்குசந்தையில் ஒரு நிறுவனத்தை வாங்கும் போது அதன் பங்குகள் நமது டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த டிமேட் கணக்குகள் எல்லாம் இல்லாத போது, ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கினால் உங்களுக்கு இந்த பங்கு பத்திரத்தை தான் கையில் கொடுப்பார்கள். அப்படி இவரது தாத்தா எஸ்பிஐ நிறுவனத்தில் இருந்து வாங்கிய பங்கு சான்றிதழ் தான் இது.
வெறும் ரூ.500: 1994ஆம் ஆண்டு அந்த மருத்துவரின் தாத்தா ரூ.500 மதிப்புள்ள எஸ்பிஐ பங்குகளை வாங்கியுள்ளார். இருப்பினும், அதை அவர் விற்கவில்லை. அவ்வளவு ஏன் தன்னிடம் எஸ்பிஐ பங்குகள் இருப்பதையே அவர் மறந்துவிட்டார். 1994இல் வெறும் ரூ. 500ஐ அவர் முதலீடு செய்த நிலையில், இப்போது அந்த தொகை பல மடங்கு அதிகரித்துவிட்டது. பங்குச்சந்தையில் ஏன் நாம் நீண்ட கால முதலீட்டை செய்ய வேண்டும் என்பதை இது காட்டுவதாக இருக்கிறது.
30 ஆண்டுகளில் அவரது எஸ்பிஐ பங்குகள் மதிப்பு 750 மடங்கு அதிகரித்துள்ளது. அப்போது அவரது தாத்தா வெறும் ரூ.500 மட்டும் முதலீடு செய்த நிலையில், இப்போது அது ₹3.75 லட்சம் மதிப்புள்ளதாக உள்ளதாக அந்த மருத்துவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "என் தாத்தா 1994இல் ரூ. 500க்கு எஸ்பிஐ பங்குகளை வாங்கினார்கள். அவர்கள் அதை மறந்துவிட்டார்கள்.
750 மடங்கு லாபம்: அவர்கள் அதை ஏன் வாங்கினார்கள், அவர்கள் அதை வைத்திருந்தார்களா என்பது அவர்களுக்குத் தெரியாது. குடும்ப சொத்துக்களை எடுக்கும் போது தான் இந்த சான்றிதழ்கள் கிடைத்தன. தற்போது அதன் மதிப்பீடு குறித்து பலர் கேட்டனர். டிவிடெண்ட் தனியாக வந்துள்ளது அதுபோக தற்போது இதன் மதிப்பு ரூ. 3.75 லட்சம் ஆகும். இது பெரிய தொகை இல்லை, ஆனால் 30 ஆண்டுகளில் 750 மடங்கு லாபம் என்பது உண்மையில் பெரியது" என்று பதிவிட்டுள்ளார்.
இது இப்படி பங்கு சான்றிதழாக இருக்கிறது. ஆனால், இப்போது அனைத்தும் நிச்சயம் டிமேட் கணக்குகளில் தான் இருக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதனால் இந்த பங்கு சான்றிதழை உரிய ஆலோசகர் உதவியுடன் டிமேட் பங்குகளாக மாற்றியுள்ளனராம். ஆலோசகர் உதவியை நாடினாலும் கையெழுத்து, முகவரி என பல சிக்கல் இருந்ததால் இதை டிமேட் பங்குகளாக மாற்ற பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பிறகும் அந்த பங்குகளை அவர் வைத்துக் கொள்ளவே முடிவு செய்துள்ளாராம். தற்போது பண தேவை இல்லை என்பதால் அதை விற்க போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அவரது ஸ்டோரி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications