ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. மொத்த தேசத்தையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.. கொதித்தெழுந்த ஜேபி நட்டா
டெல்லி: தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை ஒட்டு மொத்த தேசத்தையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும் என்று நான் தமிழக அரசை வலியுறுத்துகிறென் என்று பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் நேற்று வீட்டு முன் நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது மர்ம கும்பலினர் 8 பேர் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், முதலில் சம்பவம் நடந்த 4 மணி நேரத்திற்குள் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அவர்கள் 8 பேரும் காவல் நிலையத்தில் வந்து ஆஜராகவில்லை. காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் தான் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 8 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே பி நட்டாவும் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை ஒட்டு மொத்த தேசத்தையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும் என்று நான் தமிழக அரசை வலியுறுத்துகிறென்.
சமூகத்தின் விளிம்பு நிலை பிரிவினருக்கு அதிகாரமளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தலைவரின் வாழ்க்கை மிக கொடூரமாக துண்டிக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது. திமுக மற்றும் காங்கிரஸ் ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களை புறக்கணிக்கிறது என எல்லோராலும் அறியப்பட்ட கூற்று ஆம்ஸ்ட்ராங்கின் கொலையின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இதே விளிம்பு நிலை சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். எனவே 24 மணி நேரமும் அற்ப அரசியல் செய்வதை விடுத்து திமுக காங்கிரஸ் கூட்டணி சிறிதளவாவது ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்கள் மீது கருணையும் அக்கறையும் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications