ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் பெட்டிங் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
டெல்லி: ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28% வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புக்கொண்டது. இன்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு வரி என்று இருந்த நிலை மாற்றப்பட்டுக் கடந்த 2017ஆம் ஆண்டு நாடு முழுக்க ஜிஎஸ்டி எனப்படும் ஒரே சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த 2017இல் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இப்போது 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்தே வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: ஜிஎஸ்டி தொடர்பாக ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும். மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியில் மாற்றம் செய்வது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.
அதன்படி இன்று தலைநகர் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 50ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. இதில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இதில் கலந்து கொண்ட நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர தமிழ்நாடு அரசு சார்பில் இதில் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய முடிவுகள்: இதற்கிடையே இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்ற முக்கிய முடிவுகள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28% வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புக்கொண்டது.
மேலும், கேன்சர் மருந்தான டினுடுக்சிமாப் மற்றும் அரிய நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிறப்பு மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கவும் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதாக மேற்கு வங்க நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா தெரிவித்தார்.
28% வரி: இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "ஜிஎஸ்டி கவுன்சில் இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயங்களுக்கு பெட் செய்யப்படும் தொகைக்கே 28% வரி விதிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார். மேலும், இவற்றை லாட்டரி மற்றும் பெட்டிங் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தத் தேவையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்றைய கூட்டத்தில் ஆன்லைன் கேமிங் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஆன்லைன் கேம்களுக்கு 28% வரி விதிக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டாலும் கூட ஜிஎஸ்டி சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னரே இது அமலுக்கு வரும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில், "யாரையும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆன்லைன் பெட்டிங் கேம்களை ஊக்குவிக்க வேண்டுமா என்பதே தார்மீக கேள்வியாகும். இதனால் இந்த விவகாரத்தில் தீவிர ஆலோசனைக்குப் பிறகு 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த விவகாரத்தில் முடிவு எடுத்துள்ளோம்" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications