ஜிஎஸ்டி வசூல்: கடந்த ஆண்டை விட 26% அதிகம்..நிர்மலா சீதாராமன் பெருமிதம்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவா
டெல்லி: கடந்த செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் மட்டும் ரூ.1.47 லட்சம் கோடி என்றும் இந்த தொகை கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வசூலான் ஜிஎஸ்டி வருவாயை விட 26 சதவீதம் அதிகம் எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் ஓய்ந்த பிறகு ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் எவ்வளவு ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

8-வது முறையாக அதிகம்
இது குறித்து அவர் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டிருப்பதாவது: - கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.47 லட்சம் கோடி ஆகும். இது கடந்த 2021-ஆம் ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் 26 சதவீதம் ஆகும். இதன் மூலம் தற்போது தொடர்ந்து 7-வது முறையாக ஜிஎஸ்டி வருவாயானது 1.40 லட்சம் கோடியை தாண்டி வசூல் ஆகியுள்ளது. இதேபோல் 8-வது முறையாக ஜிஎஸ்டி வருவாயானது 1.40 லட்சம் கோடியை தாண்டி வசூல் ஆகியுள்ளது.

ஜிஎஸ்டி வசூல்
மத்திய ஜிஎஸ்டி எனப்படும் சிஜிஎஸ்டி ரூ.25 அயிரத்து 271 கோடியும், மாநில ஜிஎஸ்டி எனப்படும் எஸ்ஜிஎஸ்டி ரூ. 31 ஆயிரத்து 813 கோடியும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி எனப்படும் ஐஜிஎஸ்டி ரூ.80 ஆயிரத்து 464 கோடியும் (இறக்குமதியில் சேகரிக்கப்பட்ட ரூ.41 ஆயிரத்து 215 கோடி உட்பட) வருவாய் கிடைத்துள்ளது. மேலும் செஸ் வரி ரூ. 10 ஆயிரத்து 137 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்படும் ரூ. 856 கோடி உட்பட) வசூலாகியுள்ளது.

தமிழகத்தில் 10 சதவீதம் அதிகம்
இதில் தமிழகத்தில் மட்டும் கடந்த செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாயானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட 10 சதவீதம் அதிரித்துள்ளது. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் ஆனது ரூ.8 ஆயிரத்து 637 கோடியாக அதிகரித்துள்ளது. இதேபோல் புதுச்சேரியிலும் கடந்த ஆண்டை விட 18 சதவீதம் அதிகரித்து ரூ.188 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகம்
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் மொத்த ஜிஎஸ்டி வருவாயில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக தொகை வசூலாகியுள்ளது. மகாராஷ்டிராவி ரூ. 21 ஆயிரத்து 403 கோடியும், அதற்கு அடுத்த படியாக கர்நாடகா மாநிலத்தில் ரூ. 9 ஆயிரத்து 760 கோடியும் அதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் ரூ. 9 ஆயிரத்து 20 கோடியும் அதற்கு அடுத்ததாக தமிழகத்தில் ரூ. 8 ஆயிரத்து 637 கோடியும் வசூல் ஆகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications