2 நிமிடத்தில் எரிபொருள் காலி? அயோத்தி விமானத்தில் திகிலுடன் பயணித்ததாக கூறிய பயணிகள்.. என்ன நடந்தது?
டெல்லி: அயோத்தியில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானம், மோசமான வானிலை காரணமாக சண்டிகருக்கு திருப்பிவிடப்பட்டது. அந்த விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதாக விமானி கூறியதாக பயணி ஒருவர் திடுக்கிடும் புகாரை வைத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து டெல்லிக்கு பல்வேறு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பிறகு எப்போதும் படு பிசியாக இயங்கக் கூடிய ரூட்களில் ஒன்றாக அயோத்தி - டெல்லி உள்ளது.

இண்டிகோ விமானம்: இந்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி அயோத்தியில் இருந்து ஏராளமான பயணிகளுடன் இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. அயோத்தியில் பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் டெல்லிக்கு 4.30-க்கு வருவதாக இருந்தது. விமானம் தரையிறங்குவதற்கு வெறும் 15 நிமிடங்களே இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டுள்ளது.
எரிபொருள் இல்லாததால்: இதனால், டெல்லியை சுற்றி வட்டமடித்த விமானம் இரண்டு முறை தரையிரங்க முற்பட்டது. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. அதன்பிறகு விமானம் சண்டிகருக்கு திரும்பி சென்றதாகவும் விமானத்தில் வெறும் 1-2 நிமிடம் மட்டுமே பறக்கும் அளவுக்கு மட்டுமே எரிபொருள் இருந்ததாக விமான சிப்பந்திகள் கூறியதாக திடுக்கிடும் தகவலை விமான பயணி ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரியான சதிஷ்குமார் என்ற பயணியும் அந்த விமானத்தில் பயணம் செய்து இருக்கிறார். அவர் தனது எக்ஸ் தளத்தில் இந்த திகிலூட்டும் அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். சதிஷ்குமார் கூறியிருப்பதாவது:-
2 நிமிடங்களே தாக்குபிடிக்கும்: அயோத்தியில் இருந்து டெல்லிக்கு வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை. 45 நிமிடத்திற்கு மட்டுமே ஹோல்டிங் எரிபொருள் இருப்பதாக விமானி கூறினார். இரண்டு முறை டெல்லியில் தரையிறங்கும் முயற்சி தோல்வியடைந்ததது. இதையடுத்து, 5.30 மணியளவில் (75 நிமிடங்கள் கழித்து) சண்டிகருக்கு விமானம் திருப்பி விடப்பட்டுள்ளதாக விமானி கூறினார்.
இதனால், விமானத்தில் இருந்த சில பயணிகளும் சிப்பந்தியும் பீதி அடைந்தனர். சண்டிகரில் விமானம் மாலை 6.10 மணிக்கு தரையிறங்கியது. விமானம் தரையிறங்கிய பிறகு வெறும் 1 டூ 2 நிமிடங்கள் மட்டுமே தாக்குபிடிக்கும் அளவுக்கு விமானத்தில் எரிபொருள் இருந்த விஷயம் தெரியவந்தது. இது எவ்வளவு சோதனையான தருணம்..
ஓய்வு பெற்ற விமானி புகார்: விமானத்தில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) பின்பற்றப்பட்டதா? அல்லது நூலிழையில் தப்பினோமா என்பது குறித்து டிஜிசிஏ உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார். விமானத்தில் ஒரு சில நிமிடங்களில் எரிபொருள் தீர்ந்துவிடும் நிலை இருந்ததாக பயணி முன்வைத்து இருக்கும் குற்றச்சாட்டு பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வுபெற்ற விமானி சக்தி லும்பா, என்பவர் இண்டிகோவின் பாதுகாப்பு விதி மீறல் என்றும் டிஜிசிஏ விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த விமானத்தில் பயணித்த மற்ற பயணிகளும் தங்களின் திகில் பயணம் பற்றிய கவலைகளை பகிர்ந்து வருகின்றனர். இண்டிகோ நிறுவனம் இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை












Click it and Unblock the Notifications