ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம்
டெல்லி: காங்கிரஸ் தலைமையால் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியாது என்பதே நீண்ட காலமாக அக்கட்சி மீதான விமர்சனமாக இருந்தது. பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என பல மாநிலங்களில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டபோது காங்கிரஸ் வேடிக்கை மட்டுமே பார்த்தது. அவர்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால், இப்போது ஒரே மாதத்தில் காங்கிரஸ் 3 முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி வரிசையாக பல்வேறு மாநிலங்களில் திணறி வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டு தேர்தல் பின்னடைவுகளிலிருந்து காங்கிரஸ் ஒரு வழியாக பாடம் கற்று கொண்டது போலவே தெரிகிறது. ஒரே மாதத்தில் காங்கிரஸ் தலைமை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக துணிச்சலான மூன்று முடிவுகளை எடுத்துள்ளது.
தமிழ்நாடு
இவை தொடங்கியது தமிழகத்தில் தான். 2019 முதலே திமுக கூட்டணி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. அதில் காங்கிரஸும் அங்கம் வகித்தது. ஆனாலும், தமிழ்நாட்டில் திமுக தங்களை வெறும் ஜூனியர் பார்ட்னராக மட்டுமே நடத்துகிறது என்பது காங்கிரசாரின் நீண்ட கால புகார். இதை உணர்ந்த ராகுல் காந்தி, இந்த முறை ஒரு மெகா ஆட்டத்தை ஆடியுள்ளார்.
தமிழ்நாடு தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணியில் இருந்து விலக காங்கிரஸில் பலரும் யோசித்தனர். ராகுல் கூட தவெகவுடன் இணைய ஓகே சொல்லியிருந்தார். ஆனால், சோனியா மற்றும் கார்கே கேட்டுக்கொண்டதால் திமுக கூட்டணியில் தொடர்ந்தனர். தேர்தல் முடிவுகள் வெளியானபோது ராகுல் நினைத்ததே சரியாக இருந்தது. இதையடுத்து பல ஆண்டுகால திமுக கூட்டணியை கழற்றிவிட்டு, தமிழ்நாட்டில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ். இதன் மூலம் தமிழக காங்கிரஸ் ஒருவழியாக வளரும் சூழல் உருவாகியுள்ளது.
கேரளா
அடுத்து கேரளா.. அங்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது. தேர்தல் வெற்றிக்கு பிறகும் கூட முதலமைச்சர் நாற்காலிக்குப் பல மூத்த தலைவர்கள் முண்டியடித்தனர். கேசி வேணுகோபாலுக்கு முதல்வர் பதவி போகலாம் என சொல்லப்பட்டது. இருப்பினும், மக்களிடையே அவருக்கு செல்வாக்கு இல்லை.
கடந்த 5 ஆண்டுகளாக துணிச்சலாக சட்டமன்றத்தில் பினராயிக்கு தினசரி சிம்மசொப்பனமாக விளங்கிய வி.டி.சதீசனை கேரளாவின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுத்தார். இந்த அதிரடி முடிவு, உள்கட்சிப் பூசலைத் தடுத்து நிறுத்தியதுடன், கேரளா காங்கிரஸ் ஆட்சி அமைக்க உதவியது. மேலும், களத்தில் இள ரத்தத்தை பாய்ச்சியது.
கர்நாடகா
அடுத்து கர்நாடகா. நீண்ட காலமாகவே கர்நாடகாவில் சித்தராமையாவுக்கு பதிலாக டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இப்போது அது உச்சத்திற்கு போன நிலையில், கர்நாடக காங்கிரஸே பிளவுபடலாம் என்ற அளவுக்கு நிலைமை போனது. இப்போதும் சரியான நேரத்தில் தலையிட்ட காங்கிரஸ் தலைமை சித்தராமையாவை ராஜினாமா செய்ய சம்மதிக்க வைத்தது.
ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதால் மட்டுமே நான் ராஜினாமா செய்கிறேன் எனச் சித்தராமையாவும் கூறியிருந்தார். சித்தராமையா ராஜினாமா செய்ததால் அவரது ஆதரவாளர்களுக்கு புதிய அமைச்சரவையில் பவர்ஃபுல் போர்ட்ஃபோலியோக்களை தர முடிவு செய்துள்ளனர். டி.கே.சிவக்குமாரை சனிக்கிழமை முதல்வராக பதவியேற்கிறார்.

கோரிக்கை
இப்படி ஒரே நேரத்தில் காங்கிரஸ் மூன்று முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. ராகுலின் ஒற்றை வார்த்தையில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என ஒட்டுமொத்தத் தென்னக அரசியலையும் மாற்றி இருக்கிறது காங்கிரஸ்! சூட்டோடு சூடாக தேசிய அளவில் காங்கிரஸில் தேவையான மாற்றங்களையும் செய்ய வேண்டும் என்பதே நிர்வாகிகளின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications