ஷேக் ஹசீனாவை நெருங்கிய ஆபத்து..ஓராண்டுக்கு முன்பே அமெரிக்காவை தடுத்த இந்தியா! நட்புனா சும்மாவா!
டெல்லி: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுக்க பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தயங்கி வருகிறது. நம்முடன் காலம் காலமாக நட்பாக செயல்பட்ட ஷேக் ஹசீனாவுக்கு கைமாறு செய்யும் வகையில் அவருக்கு நம் நாட்டில் தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று வங்கதேசத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் ஷேக் ஹசீனா மீது மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டே அமெரிக்காவிடம் இந்தியா பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் என்பது கடந்த மாதம் தொடங்கியது. ஒரு மாதத்தை கடந்தும் போராட்டம் தொடர்ந்தது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

ஷேக் ஹசீனாவுக்கு நம் நாட்டில் தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்த அரசுக்கு தலைவராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே தான் ஷேக் ஹசீனாவை இந்தியா திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்று வங்கதேச உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. அதுமட்டுமின்றி ஷேக் ஹசீனாவை திரும்ப அனுப்பாவிட்டால் இந்தியா உடனான உறவில் முறிவு ஏற்படும் எனவும் மிரட்ட தொடங்கி உள்ளன. இதனால் நம் நாட்டுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் ஷேக் ஹசீனாவுக்கு பிற நாடுகள் அடைக்கலம் கொடுக்க தயங்கி வருகின்றன. இது கூடுதல் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.
ஷேக் ஹசீனாவின் தங்கை ஷேக் ரெஹனாவின் மகள் துலிப் சித்திக் ஆளும் கட்சியின் தொழிலாளர் கட்சியின் எம்பியாக பிரிட்டனில் உள்ளார். இதனால் பிரிட்டனில் தஞ்சமடைய முடிவு செய்தார். ஆனால் பிரிட்டன் அனுமதி வழங்கவில்லை. அதேபோல் மகன் சஜிப் வாஹித் ஜாய் வசிக்கும் அமெரிக்காவில் தஞ்சமடையலாம் என கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் அது கைகூடவில்லை. இதனால் சவூதி அரேபியா அல்லது பின்லாந்து செல்லலாம் என்று சொல்லப்படுகிறது.
"நிலைமை மோசமாகிவிடும்".. ஷேக் ஹசீனாவால் இந்தியாவுக்கு வந்த ‛வார்னிங்'.. அடுத்த ‛ஸ்டெப்' என்ன?
இத்தகைய சூழலில் தான் தற்போது பரபரப்பான இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஷேக் ஹசீனா விவகாரத்தில் மென்மை போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே அமெரிக்காவிடம் இந்தியா வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வருவதற்கு முன்பாகவே இந்தியா சார்பில் இப்படி கூறப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் அமெரிக்காவிடம் இப்படி கூறியதன் பின்னணியை என்னவென்றால் அது வங்கதேசம் உள்பட உலகம் முழுவதும் பரபரப்பபாக பேசப்பட்ட விஷயமாகும்.
அதாவது வங்கதேசத்தில் கடந்த 2009 முதல் 2015 ஆகஸ்ட் 5ம் தேதி வரை ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தார். இந்த காலக்கட்டத்தில் பல்வேறு மனித உரிமை மீறல்கள், அடக்குமுறைகள் நடந்துள்ளதாக ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்பின் பின்னணியை பார்த்தால் அரசியல் காரணங்கள் தான் உள்ளன. அதாவது இந்த ஆண்டின் தொடக்கத்தில் வங்கதேசத்தில் லோக்சபா தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. ஷேக் ஹசீனா தேர்தலில் முறைகேடு செய்வதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
இதையடுத்து நடந்த தேர்தலில் ஷேக் ஹசீனா வெற்றி பெற்றார். முன்னதாக ஷேக் ஹசீனாவின் அரசு எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள இடங்களில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் வெளியான நிலையில் பல உலக நாடுகள் ஷேக் ஹசீனாவுக்கு கண்டனம் தெரிவித்தன.
குறிப்பாக உலக வல்லரசான அமெரிக்கா கடுமையாக கண்டித்தது. மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும், வங்கதேசத்தினருக்கான விசா விவகாரத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க தெரிவித்தது. இது ஷேக் ஹசீனாவுக்கு பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த வேளையில் தான் இந்தியா சார்பில் அமெரிக்கா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்தியா அதிகாரிகள் தரப்பில், ‛‛ஷேக் ஹசீனா விவகாரத்தில் மென்மை போக்கை கடைப்பிடிக்க வேண்டும். ஏனென்றால் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் வங்கதேசத்தில் இஸ்லாமிய குழுக்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். இது எங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இதனால் பிரச்சனைகள் தீவிரமாக வாய்ப்புள்ளது. மேலும் இடைவிடாமல் பிரச்சனை நீடிக்கவும் வாய்ப்புள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவுக்காக இந்தியா பரிந்து பேசிய நிலையில் அமெரிக்கா இந்த விவகாரத்தில் தனது நிலையை மாற்றி கொண்டது. குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோபைடனின் நிர்வாகத்தில் ஒரு தரப்பினர் இந்தியா கூறியதை தொடர்ந்து ஷேக் ஹசீனா மீது மென்மை போக்கை கடைப்பிடித்த நிலையில் இன்னொரு தரப்பு தொடர்ந்து ஷேக் ஹசீனாவை விமர்சனம் செய்தது. ஆனால் இந்தியா தலையிட்டதால் தான் வங்கதேசம் மீதான பொருளாதார தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications