1970ம் ஆண்டிலேயே.. நாட்டை உலுக்கிய "புல்டோசர்.." யோகி ஆட்சியில் உச்சம்.. ஒரு ரிவர்ஸ் கியர்!
டெல்லி: உபி-இல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இதன் வரலாற்றைச் சற்றே திரும்பிப் பார்ப்போம்.
பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த சமயத்தில் நுபுர் சர்மா இஸ்லாமிய இறைத்தூதர் முகமது நபி குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து இருந்தார்.
இது மிகப் பெரிய அளவில் சர்ச்சையானது. உலகின் பல இஸ்லாமிய நாடுகளும் கூட இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தி தெரிவித்தன.

நுபுர் சர்மா
இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தைக் கலைக்க அரசு பல நடவடிக்கையை எடுக்கிறது. அதில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உபி அரசு, மீண்டும் "புல்டோசரை" கையில் எடுத்துள்ளது.

வன்முறை
உபி-இன் சஹரன்பூரில் வன்முறைக்குக் காரணம் எனக் கூறப்படும் முஸம்மில் மற்றும் அப்துல் வக்கீர் என்ற இருவரின் வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. அதேபோல கான்பூரில் தொழிலதிபர் முகமது இஷ்தியாக் என்பவருக்குச் சொந்தமான கட்டிடத்தை மாவட்ட அதிகாரிகள் புல்டோசரால் இடித்தனர். சட்ட விரோதமான முறையில் கட்டப்பட்ட கட்டிடங்களே இடிக்கப்பட்டதாகத் தெரிவித்த உபி அதிகாரிகள், இவர்கள் வீடுகளில் ஆயுதங்களையும் கண்டறிந்ததாகத் தெரிவித்தனர். ஹத்ராஸ், பிரயாக்ராஜ், மொராதாபாத், ஃபெரோசாபாத், அம்பேத்கர்நகர் பகுதியிலும் இதே புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புல்டோசர் நடவடிக்கை
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே புல்டோசர் நடவடிக்கை என்பது அதிகம் காணப்படும் ஒன்றாகிவிட்டது. நாட்டையே அதிர வைக்கும் இந்த புல்டோசர் அரசியலின் வரலாற்றைச் சற்று பார்க்கலாம். புல்டோசர் நடவடிக்கை சுதந்திரம் காலத்திலேயே பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் கூட, 1970களில் தான் இந்த புல்டோசர் நடவடிக்கையை முதலில் பேசுபொருளானது. அவசரக் காலத்தின் போது டெல்லி தலைமை உத்தரவின் பேரில் டர்க்மேன் கேட் இடித்துத் தள்ளப்பட்டது.

யோகி அரசு
அதன் பிறகு வந்த பல்வேறு அரசுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளைப் பயன்படுத்தினாலும் கூட, இதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றது யோகியின் உபி அரசு தான். 2017ஆம் ஆண்டு ஆட்சியை அமைத்த உடனேயே புல்டோசர் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. நில மாஃபியா, தேச விரோதிகள், சமூக விரோதிகளை ஒடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. சொல்லப்போனால், ஆட்சி அமைத்து முதல் 100 நாட்களில் ரூ 500 கோடி மதிப்பிலான நிலங்களை மீட்க வேண்டும் என்ற இலக்கும் உபி போலீசாருக்கு கொடுக்கப்பட்டது.

அதிரடி நடவடிக்கை
இதனால் புல்டோசர் நடவடிக்கை அனைத்து திசைகளிலும் இருந்து தொடங்கியது. கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் அரசியல்வாதி முக்தார் அன்சாரிக்கு சொந்தமான இடங்களில் புல்டோசர்கள் நுழைந்தன. பாகிஸ்தானில் குடியேறியவர்களின் சொத்தில் இது கட்டப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் 2020இல், அட்டிக் அகமதுவுடன் இணைக்கப்பட்ட சொத்துக்கள் இடிக்கப்பட்டன. இந்தக் கட்டிடம் உரிய அனுமதி வாங்கி கட்டப்படவில்லை என்பதை அரசு இதற்கு அளித்த விளக்கமாக இருந்தது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் புல்டோசர் நடவடிக்கை மெல்ல அதிகரித்தே வந்தது.

சொத்துகள் முடக்கம்
இதுபோன்ற புல்டோசர் நடவடிக்கைகள் மூலம் 2017-2022 காலகட்டத்தில் மட்டும் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டன. இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக யோகி அரசு புல்டோசர் பாபா என்றே கூட மக்கள் அழைக்கத் தொடங்கினர். இந்த புல்டோசர் நடவடிக்கை 2020இல் பிற மாநிலங்களுக்கும் பரவ தொடங்கியது. முதலில் மத்தியப் பிரதேசத்தில் மாஃபியா மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு எதிராக புல்டோசர் நடவடிக்கை தொடங்கியது.

மற்ற மாநிலங்கள்
அதைத் தொடர்ந்து குஜராத் மற்றும் டெல்லியிலும் கூட வன்முறையில் ஈடுபட்டவர்களின் இடங்களில் புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குஜராத், உத்தரகண்ட், கர்நாடகா என பாஜக ஆளும் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை தொடங்கியது. அனுமன் ஜெயந்தி சமயத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் இதே புல்டோசர் நடவடிக்கைகள் பாய்ந்தது. இதேபோல பல்வேறு பாஜக ஆளும் மாநிலங்களிலும் புல்டோசர் நடவடிக்கை எடுத்தது.

ராஜஸ்தான்
அதேபோல ராஜஸ்தானிலும் கூட புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராஜஸ்தானில் இப்போது பாஜக அரசு ஆட்சியில் இருந்தாலும் கூட புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்ட முனிசிபல் பாஜக கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கும் கூட வன்முறையாளர்களை ஒடுக்க புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

குற்றச்சாட்டு
புல்டோசர் நடவடிக்கைகள் என்பது குற்றவாளிகளையும் வன்முறையாளர்களையும் ஒடுக்கவே பயன்படுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுபோன்ற புல்டோசர் நடவடிக்கை ஒரு குறிப்பிட்ட மதத்தினரை நோக்கி மட்டுமே இருப்பதாக சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும் புறம் தள்ளும் வகையில் இல்லை.


Click it and Unblock the Notifications
