மம்தாவுக்கு காத்திருக்கும் மெகா சவால்! சிஏஏ மூலம் மேற்கு வங்கத்தில் காய் நகர்த்தும் பாஜக! இது வேறயா
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திங்கள்கிழமை அமல்படுத்திய நிலையில், இது மேற்கு வங்க அரசியலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.
மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் நிறைவேறிய நிலையில், இதற்குக் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தார். இருப்பினும், கடந்த 4 ஆண்டுகளாக இது குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் இருந்தது.

இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் மத்திய அரசு இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக அறிவித்தது. ந்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
இந்தியக் குடியுரிமை: மேற்கு வங்கத்தில் மாதுவா சமூகத்தைச் சேர்ந்த அகதிகள் பலர் உள்ளனர். இவர்கள் வங்கதேசத்தில் இருந்து புலம் பெயர்ந்த இந்து அகதிகள் ஆவர். கடந்த சில ஆண்டுகளாகவே இந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மாதுவா சமூகத்தினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்தச் சட்டம் குறித்த அறிவிக்கையை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.
இந்த சிஏஏ என்பது ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து குடியேறிய இந்து, சீக்கியர், ஜெயின், பார்சி, பௌத்தம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும். மேற்கு வங்கத்தில் வசிக்கும் மாதுவா சமூகத்தினர் வங்கதேசத்தில் இருந்து வந்த இந்து அகதிகள் ஆவர். லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் இந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியுரிமை திருத்த சட்டம் என்றால் என்ன.. குடியுரிமையில் பிற நாட்டு முஸ்லீம்களை புறக்கணித்தது ஏன்?
எப்படிப் பாதிக்கும்: ஏனெனில் இந்த மாதுவா சமூகத்தினர் வங்கதேசத்தில் மட்டும் இருப்பதில்லை. மேற்கு வங்கத்திலும் மாதுவா சமூகத்தினர் உள்ளனர். குறிப்பாக மேற்கு வங்கத்தின் இரண்டாவது பெரிய பட்டியல் சாதியாக மாதுவா உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களிலும், நாடியா, ஹவுரா, கூச் பெஹார், வடக்கு மற்றும் தெற்கு தினாஜ்பூர் மற்றும் மால்டா போன்ற எல்லையோர மாவட்டங்களில் வசிக்கின்றனர்.
இவர்கள் மேற்கு வங்கத்தில் உள்ள எஸ்சி மக்கள்தொகையில் 17.4 சதவிகிதமாக உள்ளனர். எனவே, லோக்சபா தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
பாஜகவுக்கு லாபம்: மாதுவா சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான சாந்தனு தாக்கூர், போங்கான் மக்களவைத் தொகுதியில் பாஜக எம்பியாக இருக்கிறார். அவர் இப்போது மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சராகவும் உள்ளார். அதேபோல மற்றொரு முக்கிய தலைவரானசுப்ரதா தாக்கூர், அதே பகுதியில் உள்ள கைகாடா சட்டமன்றத் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக உள்ளார்.
இப்படி மாதுவா சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பாஜகவில் இருக்கும் நிலையில், சரியாக லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக இந்த குடியுரிமை திருத்தச் சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக லோக்சபா தேர்தலில் இது பாஜகவுக்கு ஆதரவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் களம்: மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை முதலில் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் தான் இருந்தது. ஆனால், அவர்கள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டன.. எனவே, இப்போது அங்கே திரிணாமுல் காங்கிரஸ் vs பாஜக vs இந்தியா கூட்டணி என்று மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்த்ம 42 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அங்கே பாஜக தீவிர கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications