தமிழக மீனவர்கள் இன்னும் எத்தனை நாள் துயரம் அனுபவிக்க வேண்டும்? மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் காட்டம்
டெல்லி: இலங்கை கடற்படையால் இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் தமிழக மீனவர்கள் அனுபவிப்பார்கள். தமிழக மீனவர்களின் துயர் துடைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றனர். இதனால் தமிழக மீனவர்கள் கடலில் அச்சத்துடனே மீன் பிடிக்கும் சூழல் உள்ளது.
மேலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். அதுமட்டுமின்றி மீனவர்களின் படகுகள், வலைகளை சேதப்படுத்தும் வகையிலும் இலங்கை கடற்படையினர் செயல்பட்டு வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த பிரச்சனை நீண்டகாலமாக நீடித்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் தங்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில் தான் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குவதை தடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மனுவில் இருந்தது என்ன?
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். அதில், ‛‛தமிழகத்தின் ராமேஸ்வரம், துாத்துக்குடி, நாகப்பட்டினம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இலங்கை சிறையில் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். படகுகளும் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை விடுவிப்பதுடன் இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரிடமிருந்து பாதுகாக்க சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படை கப்பலை கண்காணிப்புக்கு நிறுத்த வேண்டும்'' என கோரப்பட்டு இருந்தது.

மீண்டும் விசாரணை
இந்த மனுவை நீதிபதிகள் அனிருத்தா போஸ், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மாதத்தின் துவக்கத்தில் விசாரணை நடத்தியது. அப்போது இந்த மனு குறித்து பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றம் கேள்வி
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛மனு மீது விரிவான பதில் அளிக்க இன்னும் கூடுதல் அவகாசம் வேண்டும்'' என கோரினார். இதைக்கேட்ட நீதிமன்றம், இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் தமிழக மீனவர்கள் துயரத்தை அனுபவிப்பார்கள்?. தமிழக மீனவர்களின் துயர் துடைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?'' என கேள்வி எழுப்பியது. இருப்பினும் விரிவான அறிக்கை அளிக்க கூறி மத்திய அரசு வழக்கறிஞர் கேட்ட கூடுதல் காலஅவகாசத்தை வழங்கியது. இதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications