இன்னும் எத்தனை குடும்பங்கள் சாக வேண்டுமோ? கவராப்பேட்டை ரயில் விபத்தால் மத்திய அரசை விளாசிய ராகுல்
டெல்லி: திருவள்ளூர் அருகே கவராப்பேட்டையில் மைசூர் - தர்பங்கா ரயில், நின்ற பயணிகள் ரயில் மீது மோதியது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ரயில் விபத்தில் பல உயிர்கள் பலியானாலும் கூட மத்திய அரசு பாடம் கற்கவில்லை. இந்த அரசு விழிக்கும் முன்பு இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிக்கப்பட வேண்டுமோ?'' என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
கர்நாடகாவின் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலையில் புறப்பட்டது. இந்த ரயில் பெங்களூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூதூர் வழியாக தர்பாங்காவுக்கு செல்லும்.

நேற்று இரவு 8.30 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில் சென்றது. அப்போது தண்டவாளத்தில் நின்றசரக்கு ரயில் மீது பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன. ரயிலில் இருந்த பார்சல் வேன் பெட்டி தீப்பிடித்தது. இதையடுத்து பயணிகள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். அங்கிருந்தவர்கள் ரயில் பயணிகளை மீட்டனர். தீயணைப்பு வீரர்கள் வந்து ரயில் பெட்டியில் பிடித்த தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் 10க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர்.
அதாவது மெயின் லைனில் செல்ல பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த ரயில் மெயின் லைனுக்கு பதில் லூப் லைனில் சென்று சரக்கு ரயில் மீது மோதியது தெரியவந்துள்ளது. 75 கிலோமீட்டர் வேகத்தில் பாக்மதி ரயில் சரக்கு ரயில் மீது மோதியதால் இந்த கோர விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் ரயில் விபத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛மைசூரு - தர்பங்கா ரயில் விபத்து என்பது பாலசூரில் நடந்த கொடூரமான ரயில் விபத்தை பிரதிபலிக்கிறது. பயணிகள் ரயில் சரக்கு ரயில் மீத மோதி உள்ளது. பல ரயில் விபத்துகளில் உயிர் இழப்புகள் ஏற்பட்டு இருந்தாலும் கூட மத்திய அரசு இன்னும் பாடம் கற்கவில்லை. விபத்துக்கு பொறுப்பேற்பது என்பது மேலிருந்து தொடங்க வேண்டும். இந்த அரசு விழிக்கும் முன்பு இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிக்கப்பட வேண்டுமோ?'' என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒடிசாவில் கோர ரயில் விபத்து நடந்தது. கொல்கத்தாவின் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் அருகே தடம் புரண்டது. அதன்பிறகு அந்த வழியாக வந்த பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், இன்னொரு சரக்கு ரயில் என 2 ரயில்கள் அடுத்தடுத்து தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் 270க்கும் அதிகமானவர்கள் பலியாகி இருந்தனர். இந்நிலையில் தான் அந்த ரயில் விபத்தை பிரதிபலிக்கும் வகையில் மைசூர் - தர்பங்கா ரயில் விபத்து அமைந்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications