Tatkal train ticket.. எப்படி முட்டி மோதினாலும் முன்பதிவு செய்ய முடியலையா?.. ஈஸி ஸ்டெப்ஸ் இருக்கே!
டெல்லி: என்னங்க தட்கல்ல ரயில்வே டிக்கெட் எப்படி முயற்சித்தாலும் கிடைக்கலையே.. அதுக்கு சில வழிகள் இருக்கு! அதை வைத்து முயற்சி செய்யுங்கள்.. ஜாலியா ஊருக்கு போகலாம்!
பேருந்து பயணத்தை விட ரயில் பயணத்தையே மக்கள் விரும்புகிறார்கள். அது பயணிகள் ரயிலாக இருந்தாலும் சரி விரைவு ரயிலாக இருந்தாலும் சரி! பேருந்தில் பயணிக்கும் தூரம் அதிகம், உடல் அசதியும் அதிகம், கட்டணமும் மிகவும் அதிகம்.
ஆனால் ரயிலில் பயணம் செய்தால் அலுப்பு என்பதே தெரியாது. இதனாலேயே பலர் சிட்டிக்குள் வேலை இருந்தாலும் வீட்டை புறநகர் பகுதியிலேயே வைத்துக் கொள்கிறார்கள். அங்கு காஸ்ட் ஆப் லிவிங் குறைவு. சிட்டிக்கு வந்தால் அதிகம். இதனால் இருக்கவே இருக்கு பயணிகள் ரயில், அதன் மூலம் அலுங்காமல் ஆபிஸுக்கு போகலாம் என விரும்புவார்கள்.

அது போல் வட மாநிலங்கள், மற்ற தென்மாநிலங்களுக்கு செல்லவும் ரயிலில் கட்டணம் என்பது மிகவும் குறைவே. ரயில் பயணங்களில் என்ன சிக்கல் என்றால் முன்பதிவு செய்வதுதான். அவசரத்திற்கு உடனே கிடைக்காது. இதே பண்டிகை காலம், திருமணம், விடுமுறை போன்ற காலங்களில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் முன்பதிவு செய்தாலும் டிக்கெட் கிடைப்பது கஷ்டம்.
இதனால்தான் தட்கல் எனும் ஒரு முறை மூலம் டிக்கெட்டை முன் பதிவு செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் நாளை பயணத்திற்கு இன்று காலை குறிப்பிட்ட நேரத்திற்கு தட்கல் முன்பதிவு ஆன்லைனில் ஓபனாகும். அந்த நேரத்தை சரியாக தெரிந்து கொண்டு வேகமாக முன்பதிவு செய்தால் நிச்சயம் டிக்கெட் கிடைக்கும். ஆனால் பலர் இந்த தட்கல்லிலும் டிக்கெட் கிடைப்பதில்லை என்கிறார்கள்.
இது ஏன் என்றால், தட்கலில் டிக்கெட் முன் பதிவு செய்ய பயணிகளின் விவரங்களை நிரப்புவதற்கு அதிக நேரம் எடுக்கும். இந்த நேரத்தில் மற்றவர்கள் உங்களுக்கு தேவையான டிக்கெட்டை முன்பதிவு செய்துவிடுகிறார்கள். ஒரு வேளை நீங்கள் உங்கள் விவரங்களை வேகமாக நிரப்பினாலும் பணம் செலுத்தும் சிக்கலில் நேரம் வீணாகி டிக்கெட்டும் கிடைக்காமல் போகும்.
இப்படி எந்த சிக்கலும் இல்லாமல் சில நிமிடங்களில் உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை பெறுவதற்கான சில டிப்ஸை இங்கே வழங்குகிறோம். அதை வைத்து தட்கலில் முன்பதிவு செய்தால் நிச்சயம் டி்க்கெட் கிடைக்கும். உங்கள் லேப்டாப் அல்லது மொபைல் போனில் மட்டுமே செய்தால் போதும். நீங்கள் மே 4 ஆம் தேதி பயணம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான தட்கல் டிக்கெட் மே 3 ஆம் தேதி முன்பதிவு செய்யப்படும்.
ஏசி பெட்டிகளுக்கு காலை 10 மணிக்கும், நான் - ஏசி அல்லாத பெட்டிகளுக்கு காலை 11 மணிக்கும் தட்கல் முன் பதிவு தொடங்குகிறது. இந்த வின்டோ ஒரு மணி நேரம் மட்டுமே திறந்திருக்கும். ரயில் நிலையங்களில் உள்ள தட்கல் முன் பதிவு கவுன்ட்டருக்கு சென்றும் டிக்கெட்டை பதிவு செய்யலாம். IRCTC இணையதளத்தின் மூலம் செல்ல வேண்டும் என்றால் பொதுவான ஒரு கணக்கை உருவாக்க வேண்டும்.

அங்கு ரயில் தொடர்பாக கேட்கப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்து கீழே உள்ள கோட்டாவில் தட்கல் என கிளிக் செய்ய வேண்டும். ரயில்களின் பட்டியல் மற்றும் அதில் இருக்கும் காலி இருக்கை, பெர்த்துகளுடன் கூடிய இருக்கை பட்டியலை காட்டும். உங்களுக்கு எந்த ரயில் விருப்பமோ அதை கிளிக் செய்து கொள்ளவும். பயணிகள் விவரங்கள் கேட்கப்படும், அதை நிரப்பிவிடவும். பின்னர் உங்கள் முகவரியை உள்ளிட்டு பணம் செலுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள்.
இதை செய்தால் கால தாமதம் ஆகும். இதனால் டிக்கெட் எளிதில் தீர்ந்துவிடும். பயணிகளின் பெயர், வயது, உள்ளிட்ட விவரங்களை நிரப்பத்தான் கால தாமதம் ஆகிறது. இதனால் முன் கூட்டியே நிரப்புவதற்கான Add New வசதியை IRCTC வழங்குகிறது. நீங்கள் டிக்கெட் புக் செய்யும் போது உங்களிடம் பயணிகளின் விவரங்களை கேட்டால் Add Existing என்பதை கிளிக் செய்யவும்.
அதுபோல் ஐஆர்சிடிசி வாலட்டிலும் பணத்தை முன் கூட்டியே வைத்திருங்கள். இதனால் பணம் செலுத்தவும் நேரம் அதிகம் எடுக்காது. உங்கள் முகவரியை மட்டும் டைப் செய்தால் போதும். பணம் செலுத்தியதும் உங்களுக்கான டிக்கெட் 90 சதவீதம் உறுதியாகிவிடும். ஆனால் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் டிக்கெட் உறுதியாவதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications