திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குக் கொழுப்பு.. ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும்.. ராகுல் காந்தி
டெல்லி: திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோயிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குக் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் வேதனையளிக்கின்றன. திருப்பதியில் உள்ள கடவுள் பாலாஜி இந்தியாவிலும், உலகமெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் விருப்பத்திற்குரிய தெய்வமாக இருக்கிறார். இந்தக் கலப்பட பிரச்னை ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும் என்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் இந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தது முதல், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, முன்பு ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. அந்த வகையில் தான் திருப்பதி எழுமலையான் கோவில் தொடர்பாக மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில், திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டினை கூறினார். நேற்று முன்தினம் அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, "ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய அரசின் கீழ் திருப்பதி ஏழுமலையான் கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வந்தது.
கடந்த 5 ஆண்டுகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திருமலையின் புனிதத்தை கெடுத்துவிட்டார்கள். அன்னதானத்தின் தரத்தில் சமரசம் செய்தும், புனிதமான திருமலை லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியும் மாசுபடுத்தி உள்ளாரகள். இருப்பினும், நாங்கள் இப்போது தூய நெய்யை பயன்படுத்துகிறோம். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தைப் பாதுகாக்க நாங்கள் பாடுபடுகிறோம்" என்று தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடுகூறிய அடுத்த நாளே ஆய்வு முடிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி, கடந்த ஜூலை மாதம் திருமலைக்கு விநியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாகவும் ஆய்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தேங்காய் எண்ணெய், பருத்திக் கொட்டை, பலாக்கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்கள் கூட கலந்திருந்திருப்பதாகவும் ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறுகையில், "திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோயிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குக் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் வேதனையளிக்கிறது. திருப்பதியில் உள்ள கடவுள் பாலாஜி (ஏழுமலையான்) இந்தியா மட்டுமின்றி, உலகமெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் விருப்பத்திற்குரிய தெய்வம் ஆவார். எனவே இந்த திருப்பதி கலப்பட பிரச்னை ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும். இந்த விவகாரம் முழுமையாக கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. இந்தியாவில் உள்ள அரசு அதிகாரிகள் நமது மதத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும்" இவ்வாறு ராகுல் காந்தி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications