கங்கனாவை எனக்கு பிடிக்காது.. இருந்தாலும் இது தப்பான விஷயம்.. திடீரென சப்போர்டுக்கு வந்த மூத்த நடிகை
டெல்லி: கங்கனா ரனாவத்தை தனக்கு பிடிக்காது என்றாலும் சண்டிகர் விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று பாலிவுட் திரையுலகில் மூத்த நடிகைகளில் ஒருவரான ஷபானா ஆஸ்மி தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரனாவத், இமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். அங்கு கங்கனா ரனாவத் சுமார் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம், இமாச்சல பிரதேசத்தில் இருந்து டெல்லி செல்வதற்காக கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்துக்கு சென்றார்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எப்) பெண் காவலர் குல்வீந்தர் கவுர், கங்கனாவை நோக்கி வேகமாக வந்தார். கங்கனா ரனாவத் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த பெண் காவலர், கங்கனாவின் கன்னத்தில் 'பளார்' என ஓங்கி அறைந்தார். இதனால் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார் கங்கனா ரனாவத்.
பெண் காவலர் தாக்கியதில் கங்கனாவின் கன்னத்தில் கை விரல்கள் தடம் பதியும் அளவுக்கு பெண் காவலர் தாக்கியிருந்தார். விவசாயிகள் போராட்டத்தை கங்கனா ரனாவத் கொச்சைப்படுத்தியதாகவும், 100 ரூபாய் வாங்கி கொண்டு போராடுவதாகவும் அவர் பேசினார். கங்கனா ரனாவத் இவ்வாறு பேசும்போது எனது தாயார் போராட்ட களத்தில் இருந்தார் என்றும் பெண் போலீசார் கூறியிருந்தார்.
கங்கனாவை தாக்கிய பெண் காவலர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதனிடையே, கங்கனா ரனாவத்தை தாக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரபல நடிகை ஷபானா ஆஸ்மி கூறி உள்ளார். இது தொடர்பாக ஷபானா அஸ்மி கூறியதாவது:- கங்கனா ரனாவத்தை எனக்கு பிடிக்காது. ஆனால், கங்கனா ரனாவத்தை தாக்கியவரை கொண்டாடும் கூட்டத்துடன் நான் இணைய மாட்டேன்.
பாதுகாப்புக்கு இருக்கும் காவலர் ஒருவரே சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டால் யாருமே பாதுகாப்பாக இருக்க முடியாது" என்று தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார். கடந்த வியாழக்கிழமை தன்னை பெண் காவலர் தாக்கியதாக வீடியோ ஒன்றை வெளியிட்ட கங்கனா ரனாவத், பஞ்சாபில் பயங்கராவதிகள் அதிகரித்து விட்டதாக கவலை தெரிவித்து இருந்தார்.
கங்கனா ரனாவத் வெளியிட்ட வீடியோவில், 'நான் நலமாக இருக்கிறேன். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பாதுகாப்பு சோதனையின் போது பெண் காவலர் ஒருவர் என்னை தாக்கினார். நான் ஏன் என்னை அடித்தீர்கள் என்று கேட்ட போது, விவசாயிகளுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என்றார். தற்போது நான் நலமாகவே இருக்கிறேன். ஆனால், பஞ்சாபில் பயங்கரவாதம் அதிகரித்து விட்டது. இதை எப்படி கையாள போகிறார்கள்" என்றார்.
மூத்த நடிகையான ஷபானா ஆஸ்மி ஏராளமான இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். ஐந்து முறை சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதுகளை இவர் பெற்றுள்ளார் . கிட்டத்தட்ட 160 திரைப்படங்களில் நடித்துள்ளார். 73 வயதான சபனா ஆஸ்மி தற்போதும் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications