பாஜக கனவில் லாரி மண்ணை அள்ளிப் போடும் கருத்து கணிப்பு.. ஒவ்வொரு மாநிலத்திலும் இதுதான் நடக்குமோ?
டெல்லி: லோக்சபா தேர்தல் குறித்த எக்ஸிட் போல் முடிவுகள் பெரும்பாலும் மத்தியில் பாஜகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என வரிந்து கட்டிக் கொண்டு திட்டவட்டமாக தெரிவிக்கின்றன. ஆனால் ஒன்றிரண்டு எக்ஸிட் போல் முடிவுகள்தான் ஒருவேளை இதுதான் நிஜமாக இருக்கப் போகிறதோ? என கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றன.
18-வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டன. ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந் தேதி வரை இந்த தேர்தல் 543 தொகுதிகளிலும் நடத்தப்பட்டது. இதனையடுத்து நேற்று மாலை முதல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

எக்ஸிட் போல் முடிவுகள்: 18-வது லோக்சபா தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஹாட்ரிக் வெற்றியைப் பெறும்; வட இந்தியாவில் மட்டுமல்ல.. கிழக்கு, தென்னிந்தியாவிலும் பாஜகவின் காவி கொடி பறக்கும் என்கின்றன. ஆனால் கள நிலவரங்களுக்கு மாறானதாக இந்த எக்ஸிட் போல் முடிவுகள் இருக்கின்றன என "இந்தியா' கூட்டணித் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாறுபட்ட எக்ஸிட் போல் முடிவுகள்: அதேநேரத்தில் அக்னி நியூஸ் மற்றும் டிபி சேனல் ஆகியவற்றின் எக்ஸிட் போல் முடிவுகள் களநிலவரம் இதுவாகத்தான் இருக்குமோ என்கிற கேள்வியை எழுப்பும் வகையில் இருக்கின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணி 37 முதல் 39 இடங்களையும் அதிமுக 1 இடத்தையும் பாஜக 1 இடத்தையும் பெறும் என்கிறது டிபி சேனல்.
கேரளா: கேரளாவில் இதர எக்ஸிட் போல் முடிவுகள் பாஜக கணிசமான இடங்களைப் பெறும் கணிக்கின்றன. ஆனால் டிபி சேனல் எக்ஸிட் போல் முடிவுகளோ, காங்கிரஸ் கூட்டணிக்கு 16 முதல் 18 ; இடதுசாரிகளுக்கு 2 முதல் 3 இடங்கள் கிடைக்கும் என தெரிவித்திருப்பது தேர்தலுக்கு முன்னர் களத் தகவல்களின் அடிப்படையில் வெளியான செய்திகளை உறுதி செய்கின்றன. அதேபோல பாஜகவுக்கு கேரளாவில் 1 இடம் கிடைக்கக் கூடும் என்பதும் ஏற்புக்குரியதாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கர்நாடகா: இதேபோல கர்நாடகா கள நிலவரத்தின் அடிப்படையில் ஆளும் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்பதுதான் தகவல்கள். ஆனால் பெரும்பாலான எக்ஸிட் போல்கள் கர்நாடகாவில் காங்கிரஸ் காலி என்ற ரேஞ்சுக்கு முடிவுகளை வெளியிட்டன. டிபி சேனல் எக்ஸிட் போல் முடிவுகளோ, இந்தியா கூட்டணிக்கு 18 முதல் 20 இடங்களும் பாஜக கூட்டணிக்கு 8 முதல் 10 இடங்களும் கிடைக்கலாம் என தெரிவித்திருக்கிறது. பாஜகவுக்கு இந்த எண்ணிக்கை பெரும் பின்னடைவாகவே இருக்கக் கூடும். அதே நேரத்தில் இந்தியா கூட்டணிக்கு அதீதமான எண்ணிக்கையாக இருக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரையில் பாஜகதான் அத்தனை இடங்களையும் அள்ளும்; காங்கிரஸ் கதை முடிந்தது என முடிவுரை எழுதி இருக்கின்றன பல எக்ஸிட் போல் முடிவுகள். ஆனால் டிபி சேனல் முடிவுகளோ சத்தீஸ்கரில் இந்தியா கூட்டணிக்கு 3 முதல் 5 இடங்கள் கிடைக்கும் என்றும் பாஜகவுக்கு 6 முதல் 8 இடங்கள் கிடைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருப்பதும் கள நிலவரத்தை படம் பிடிப்பதாகவே தெரிகிறது என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.
குஜராத்: குஜராத் மாநிலம் எப்போதும் பாஜகவுக்கு அள்ளித்தரும் மாநிலம்தான் என்றாலும் அங்கே இந்த முறை மிகக் கடுமையான அதிருப்தி, எதிர்ப்புகளை அந்த கட்சி எதிர்கொண்டது. இதனால் குஜராத்தில் காங்கிரஸ் ஒரு சில இடங்களைக் கைப்பற்றலாம் என்பது களநிலவரம். ஆனால் பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் குஜராத்தையும் பாஜக முழுமையாகவே கைப்பற்றும் என தெரிவித்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் டிபி சேனல் எக்ஸிட் போல் முடிவுகளோ, குஜராத்தில் 23 முதல் 25 இடங்களில் பாஜகவும் காங்கிரஸ் கட்சிக்கு 1 முதல் 3 இடங்களும் கிடைக்கும் என்கிறது.
இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை: ஒட்டுமொத்தமாக டிபி எக்ஸிட் போல் முடிவுகளானது இந்தியா கூட்டணிக்கு 255 முதல் 290 இடங்களும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 201 முதல் 241 இடங்களும் கிடைக்கும் என்கிறது. இதனைத்தான் இந்தியா கூட்டணி தலைவர்களும் களநிலவரம் இதுவே.. பாஜக கனவில் மண்தான் விழும் என நம்பிக்கையோடு ஜூன் 4-ந் தேதிக்காக காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications