நிறைய நடுங்க.. அப்போதான் வெட்ட முடியும்.. டிரெண்டாகும் படத்துக்கு நெட்டிசன்கள் கிண்டல்!
டெல்லி: மரக்கட்டைகளை எடுத்து செல்லும் ஒரு லாரியின் பின்புறத்தில் "அதிக மரங்களை நடவும்" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி அவனிஸ் சரன் வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
பீகாரை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அவானிஸ் சரண். சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னம்பிக்கை ஊட்டும் பதிவுகளை வெளியிட்டு கவனம் பெறுவார்.
இப்படிதான் அண்மையில் தனது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை அவர் பகிர்ந்து இருந்தார்.

அவானிஸ் கான்
பத்தாம் வகுப்பில் வெறும் 44.8 சதவீதம் மதிப்பெண் மட்டுமே எடுத்து இருந்த அவர், தனது விடா முயற்சியால் ஐ.ஏ.எஸ் அதிகாரியானது பலருக்கும் தன்னம்பிக்கை அளிப்பதாக இருந்தது. குறிப்பாக 10 ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் நீ அவ்வளவுதான் என்று சொல்லும் பெற்றோர்களுக்கு, அது அப்படி அல்ல. . எந்த மதிப்பெண் எடுத்தாலும், நம்மால் முடியும் என நினைத்தால் உயரிய பதவிகளில் ஒன்றான ஐ.ஏ.எஸ் அதிகாரியாக கூட மாறிவிடலாம் எனக் நிரூபித்து காட்டும் வகையில் இருந்தது நெட்டிசன்களால் கொண்டாடப்பட்டது.

அதிக மரங்களை நடவும்
அந்த வகையில், சமீபத்தில் கூட இவர், பெண் ஒருவர் லாரி ஓட்டும் காட்சிகளை பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவியதோடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அவானிஷ் சரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில், வெட்டிய மரங்களின் கட்டைகளை எடுத்து செல்லும் ஒரு லாரியின் பின்புறத்தில் "அதிக மரங்களை நடவும்" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதை சுட்டிக்காட்டி அவானிஷ் சரண், முரண்பாடுக்கு தெளிவான விளக்கம் இதுதான் என கேப்ஷன் போட்டு பகிர்ந்துள்ளார்.

நெட்டிசன்கள் கருத்து
இந்த பதிவுதான் நெட்டிசன்கள் மத்தியில் தற்போது அதிகம் டிரெண்ட் ஆகி வருகிறது. இதில் என்ன முரண்பாடு உள்ளது, அதிக மரங்கள் நட்டால்தான் தனது தொழிலை சிறப்பாக செய்ய முடியும். நான் அதிக மரங்களை வெட்ட முடியும் என்ற கருத்தில்தான் இப்படி எழுதப்பட்டு இருக்கிறது என நெட்டிசன் ஒருவர் கேலியாய் கலாய்த்திருக்கிறார். மேலும் ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், அப்போதுதான் என்னால் அதிகம் சம்பாதிக்க முடியும் என லாரியின் உரிமையாளர் மறைமுகமாக சொல்லியிருக்கிறார் போல என பதிவிட்டு உள்ளார். இவ்வாறாக நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

கண்டனம்
இவ்வாறு ஒருசிலர் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டாலும், மேலும் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவிடாமலும் இல்லை. ஏற்கனவே சுற்றுச்சூழல் மாறுபாடு காரணமாக போதிய மழைப் பொழிவு இல்லை. பூமியின் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதற்கு மரங்களை அதிகம் வளர்ப்பதே முக்கிய தீர்வு என்று இயற்கை ஆர்வலர்கள் சொல்லி வரும் நிலையில், இப்படி மரங்களை வெட்டுவது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் சூனியம் எனவும் நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கங்களை கொட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications