மினிமம் பேலன்ஸ் ரூ.50 ஆயிரமா? கொதித்தெழுந்த வாடிக்கையாளர்கள்.. அறிவிப்பை திரும்ப பெற்றது ICICI வங்கி
டெல்லி: ஐசிஐசிஐ வங்கி சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி வாடிக்கையாளர்கள் இனி வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸாக ரூ. 50,000 வைத்திருக்க வேண்டும் என்றும் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. இந்த அறிவிப்புக்கு வாடிக்கையாளர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்த நிலையில், தற்போது அறிவிப்பை திரும்ப பெற்று புது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
கடந்த வாரம் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், மெட்ரோ சிட்டி மற்றும் நகர்ப்புறங்களில் ₹10,000-லிருந்து ₹50,000 ஆகவும், வளர்ந்து வரும் நகரங்களில் உள்ள வங்கி கணக்குகளில் ₹5,000-லிருந்து ₹25,000 ஆகவும், கிராமப்புறங்களில் ₹2,000-லிருந்து ₹10,000 ஆகவும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் சேமிப்பை வைத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டு தற்போது புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தற்போது மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் ₹15,000, வளர்ந்து வரும் நகர்ப்புறங்களில் ₹7,500, மற்றும் கிராமப்புறங்களில் ₹2,500 என மாதாந்திர சராசரி இருப்பு வைத்திருந்தால் போதுமானது என அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஆகஸ்ட் 1, 2025 முதல் திறக்கப்படும் புதிய சேமிப்புக் கணக்குகளுக்கு இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும் என வங்கி தெரிவித்துள்ளது.
இந்த குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கத் தவறும் வாடிக்கையாளர்களுக்கு, ₹500 அல்லது இருப்புத் தொகைக் குறைபாட்டில் 6% இதில் எது குறைவோ அது அபராதமாக விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. குறைந்த மதிப்புடைய வாடிக்கையாளர்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கருதப்பட்டது.
பொதுவாக, பன்னாட்டு வங்கிகள் கிளைக் கட்டுப்பாடுகள் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு சேவையளிப்பதில் சிரமம் ஏற்படும்போது இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கின்றன என்று வங்கி வட்டாரங்கள் குறிப்பிட்டன. புதிய மாதாந்திர சராசரி இருப்புத் தொகை மற்றும் கட்டணங்கள், சம்பளக் கணக்குகள், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், ஓய்வூதியதாரர்கள், BSBDA/PMJDY கணக்குகள் மற்றும் சிறப்புத் தேவையுடையோருக்கான கணக்குகளுக்குப் பொருந்தாது என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், ஜூலை 31, 2025-க்கு முன் திறக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பொருந்தாது என்று வங்கி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications