கோவிஷீல்டு & கோவாக்சின்.. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செயல்திறன் எப்படி? ஐசிஎம்ஆர் முக்கிய ஆய்வு
டெல்லி: நாட்டில் தற்போது பயன்படுத்தப்படும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.11 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 3847 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் தற்போது 20 லட்சத்திற்கும் அதிகமான ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.
இருப்பினும், கடந்த 20 நாட்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மறுபுறம் தடுப்பூசி பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பூசிகள்
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த 2 தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த ஆய்வுகள் அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் அறிவித்துள்ளது.

4 ஆயிரம் பேரிடம் சோதனை
கொரோனா பாதிப்பு அதி தீவிரமாக மாறுவதை இந்த தடுப்பூசிகள் எந்தளவு தடுக்கின்றன என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இது குறித்து ஐசிஎம்ஆரின் தேசிய தொற்றுநோய்வியல் அமைப்பின் மூத்த மருத்துவர் தருண் பட்நாகர் கூறுகையில், "நாடு முழுவதும் 45 வயதைக் கடந்த நான்காயிரம் பேருக்கு மத்தியில் இந்த சோதனை நடைபெறும். முதல் டோஸை மட்டும் எடுத்துக் கொண்டவர்கள், 2 டோஸ்களையும் எடுத்துக் கொண்டவர்கள் என இரு தரப்பினருக்கும் இந்த ஆய்வுகள் நடத்தப்படும்.

செயல்திறனைக் கண்டறிய ஆய்வு
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் எத்தனை பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களில் எத்தனை பேர் மருத்துவமனைகளில் அனுமதியாக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது, அவர்களுக்கு ஏற்பட்ட வைரஸ் பாதிப்பின் தீவிர தன்மை ஆகிவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதன் மூலம் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பின் தீவிரமின்மையைத் தடுப்பூசிகள் எந்தளவு தடுக்கிறது என்பதை நாம் கண்டறியலாம்" என்று அவர் தெரிவித்தார்.

முதல் ஆய்வு
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தடுப்பூசியின் செயல்திறன் பற்றி ஆய்வு செய்யப்படும் முதல் ஆய்வு இதுவாகும். நாட்டில் இதுவரை சுமார் 20 கோடி பேருக்குக் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே ஒரு தீர்வு என்பதால் இந்த ஆய்வு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications