புது தலைவலி உருமாறிய டெங்கு: உபி-இல் பரவும் D2 திரிபு..மோசமான பாதிப்பு ஏற்படும்.. ஐசிஎம்ஆர் வார்னிங்
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் டெங்குவின் D2 திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரசே இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இப்போது வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
இது மூன்றாம் அலையின் தொடக்கமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக மூன்றாம் அலையில் சிறார்கள் மத்தியில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

மர்ம காய்ச்சல்
இந்தச் சூழலில் உத்தரப் பிரதேசத்தின் வடக்கு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே மர்ம காய்ச்சல் பரவி வந்தது. பெரும்பாலும் குழந்தைகளையே இது தாக்கினாலும் பெரியவர்களிடையேயும் இது பரவியது. இதில் இருந்து குணமடைய 10 நாட்கள் வரை சிகிச்சை தேவைப்பட்டது. குழந்தைகள் என்றால் இதிலிருந்து குணமடைய 2 வாரங்களுக்கு மேல் ஆவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

டெங்குவின் டி 2 திரிபு
இந்நிலையில் இந்த மர்ம காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு வல்லுநர் குழுவை அனுப்பியிருந்தது. உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் இருந்து மாதிரிகளைச் சேகரிக்கப்பட்ட ஆராய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்தச் சூழலில் மருத்துவ சோதனைகள் குறித்த முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு டெங்குவின் டி 2 திரிபு (D2 strain of dengue) காரணம் என இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

ஐசிஎம்ஆர் தகவல்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பல்ராம் பார்கவா, "உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் டெங்குவின் டி 2 திரிபு பாதிப்பு பதிவாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத், மதுரா, ஆக்ராவில் பகுதிகளில் இந்த வகை டெங்குவால் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளது. டெங்குவின் இந்த டி 2 திரிபு மிகவும் ஆபத்தானது. இது ரத்தப்போக்கு ஏற்படுத்தும் உள்ளது.

பொதுமக்கள் அச்சம்
எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொசுக்கள் வளரும் சூழலை ஏற்படுத்தாதீர்கள். கொசுக்கள் பெருகுவதைத் தடுக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தண்ணீரைத் தேங்கவிடக் கூடாது. அதுவும் அப்போது பருவமழை காலம் என்பதால் டெங்கு நோய் வேகமாகப் பரவும் வாய்ப்புள்ளது" என்றார். ஏற்கனவே வரிசையாகத் தோன்றும் உருமாறிய கொரோனா வகைகள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் இது டெங்குவின் டி 2 திரிபு குறித்த செய்தி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெங்குவின் டி 2 திரிபு என்றால் என்ன
ஆனால், டெங்குவின் இந்த டி 2 திரிபு ஒன்றும் புதிய உருமாறிய வைரஸ் திரிபு இல்லை. இவை 1970கள் முதலே பரவி வருகிறது. டெங்கு வைரசில் மொத்தம் நான்கு வகையான திரிபுகள் உள்ளன. அதில் இந்த Dengue virus serotype-2 (DENV-2 அல்லது D2) மிகவும் ஆபத்தான திரிபு என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது ரத்தக்கசிவு அதிகப்படுத்தும் என்பதால், மற்ற திரிபுகளுடன் ஒப்பிடுகையில் இதுவே மோசமான பாதிப்பையும் அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது.

உத்தரப் பிரதேசம்
மேற்கு உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த காய்ச்சல் பரவி வருகிறது. பிரோசாபாத் மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். உபி-இல் இதுவரை இந்த காய்ச்சலால் 40 குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 68 பேர் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications