சுதந்திரமாக இருக்க விரும்பினால் திருமணமே செய்யக்கூடாது.. உச்சநீதிமன்றம் சொன்ன முக்கிய மேட்டர்
டெல்லி: ‛‛திருமணம் ஆகிவிட்டால் கணவனிடம் இருந்து மனைவியும், மனைவியிடம் இருந்து கணவனும் சுதந்திரமாக இருக்க விரும்புவது சாத்தியமற்றது. யாராவது சுதந்திரமாக இருக்க விரும்பினால் அவர்கள் திருமணமே செய்யக்கூடாது'' என்று வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருப்பது கவனத்தை பெற்றுள்ளது.
இந்தியாவை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் நடந்தது. மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தான் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிங்கப்பூரில் இருந்த மனைவி தனது குழந்தைகளுடன் இந்தியா வந்தார். மேலும் கணவரை விட்டு பிரிய மனைவி முடிவு செய்தார்.

இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே தான் இளைய மகனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் அந்த பெண்ணின் கணவர் நாடு திரும்பினார். மகனின் பிறந்தநாளை தன்னுடன் கொண்டாட அவர் விரும்பினார்.
மனைவியின் கட்டுப்பாட்டில் குழந்தை
ஆனால் மனைவியின் கட்டுப்பாட்டில் குழந்தைகள் உள்ளன. இதனால் அவர் தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிவி நாகரத்னா, ஆர் மகாதேவன் அமர்வு மனு மீது விசாரணை நடத்தியது.
அப்போது குழந்தைகளின் தாய் காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். கணவன் மற்றும் மனைவி சார்பில் நீதிமன்றங்களில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வேளையில் அந்த பெண், ‛‛2 குழந்தைகளை பராமரித்து வருகிறேன். ஆனால் எனது கணவர் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பவில்லை. பராமரிப்பு செலவுக்கு பணம் இல்லை. இதனால் வேலை செய்வது அவசியமாகிறது'' என்றார்.
சிங்கப்பூரில் வாழ்வதில் என்ன பிரச்சனை?
அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், ‛‛ ''நீங்கள் குழந்தைகளுடன் சிங்கப்பூரில் கணவருடன் வாழ்வதில் என்ன பிரச்சினை?'' என்று கேட்டனர். அதற்கு அப்பெண், ''கணவரின் செயல்பாடுகளை பார்த்தால், அவருடன் சிங்கப்பூரில் வாழ்வது கடினம். வாழ்வாதாரத்துக்கு வேலை தேவை. இதனால் இந்தியா வந்துள்ளேன்'' என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், ''வேலை கிடைக்கிறதோ, இல்லையோ நீங்கள் அங்கு சென்றால் உங்களை அவர் பராமரிக்க வேண்டும். தேவைப்பட்டால், உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் பணம் டெபாசிட் செய்யுமாறு கணவரிடம் கேட்கலாம்'' என்று கூறினர். அதற்கு அந்த பெண்ணோ, ''நான் யாரையும் சார்ந்திருக்க விரும்பவில்லை. எனக்கு பணம் வேண்டாம். நான் வேலை பார்த்து சமாளித்து கொள்வேன்'' என்று கூறினர்.
சுதந்திரம் வேண்டுமா? திருமணம் செய்யக்கூடாது
அப்போது நீதிபதிகள், ‛‛அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. திருமணம் ஆகிவிட்டால் மனைவி, குழந்தைகளை கணவன் பராமரிக்க வேண்டும். எங்களை பழைய ஆள் என்று நினைத்தாலும் பரவாயில்லை. நாங்கள் ஒரு முடிவில் தெளிவாக இருக்கிறோம்.
நீங்கள் இருவரும் படித்தவர்கள். திருமண உறவில் இருக்கும்போது கணவரோ, மனைவியோ தாங்கள் அடுத்தவரை சார்ந்திருக்க விரும்பவில்லை என்று சொல்வது சாத்தியமில்லை. யாராவது சுதந்திரமாக இருக்க விரும்பினால் அவர்கள் திருமணமே செய்திருக்கக்கூடாது. திருமணம் ஆகிவிட்டால் கணவன் -மனைவி இடையே ஏதாவது பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதை நாமே தீர்த்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் என்ன தவறு செய்தனர்?
திருமணம் என்பது இரண்டு ஆன்மாக்கள் ஒன்று சேருவது. பிறகு எப்படி நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும்?. நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி. குழந்தைகள் சிறிய வயதில் உள்ளனர். அம்மா, அப்பா தனித்தனியே என உடைந்த குடும்பத்தை பார்க்க வேண்டுமா? அவர்கள் என்ன தவறு செய்தனர்?'' என்று கேள்வி எழுப்பினர்.
இதை கேட்ட அந்த பெண், ‛‛ஒரு கையால் தட்டினால் ஓசை வராது'' என்று அந்த பெண் கூறினார். அதற்கு நீதிபதிகள், ‛‛நாங்கள் உங்களுக்கு மட்டும் இதனை சொல்லவில்லை. இருவருக்கும் சேர்த்து தான் சொல்கிறோம். நேரம் எடுத்து யோசித்து பாருங்கள்'' என்றனர். இதையடுத்து அந்த பெண் சிந்தித்து பார்ப்பதாக கூறினார்.
நீதிமன்றம் போட்ட உத்தரவு
இதையடுத்து நீதிபதிகள், ‛‛திருமணம் செய்தால் மனைவி, குழந்தைகளை கணவன் பராமரிக்க வேண்டும்.2 குழந்தைகளின் பராமரிப்புக்கு ரூ.5 லட்சம் டெபாசிட் செய்ய உத்தரவிட்டார். அதோடு பிறந்தநாள் தினத்தில் குழந்தையை கணவரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதுமட்டுமின்றி பிறந்நாள் தினத்தின் மாலையில் மனைவியின் வீட்டில் குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியது. அதோடு இந்த வழக்கை செப்டம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நேற்று காலை முதல் குழந்தைகள் தங்களின் தந்தையிடமும், அதன்பிறகு மாலையில் தாய் வீட்டிலும் பிறந்தநாள் கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications