கர்நாடகா காங். எம்பியின் தென்னிந்தியா தனிநாடு கோஷம்- மல்லிகார்ஜூன கார்கே விளக்கத்தால் பாஜக கப்சிப்!
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்படுவதால் 'தென்னிந்திய மாநிலங்கள் தனிநாடு' கோரும் நிலைமை உருவாகி இருப்பதாக கர்நாடகா காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் பேசியது குறித்து ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று விளக்கம் தந்தார்.
லோக்சபாவில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஓட்டுகள் கிடைக்காது. அதனால்தான் தமிழ்நாடு திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளன என குற்றம்சாட்டினார். அதேபோல கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், இந்தி பெல்ட் மாநிலங்களுக்குதான் தென்னிந்திய மாநிலங்களின் நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களுக்கு எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவும் இல்லை என விமர்சித்திருந்தார்.
கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமாரின் சகோதரரான காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ், தென்னிந்திய மாநிலங்களின் நிதியை இந்தி பெல்ட் வட மாநிலங்களுக்கு மத்திய அரசு தாரை வார்க்கிறது. இந்தி பெல்ட் மாநிலங்களில் இருந்து தென்னிந்திய மாநிலங்கள் பிரிந்து சென்று தனிநாடு கோரும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன என்றார். டிகே சுரேஷின் இந்த பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ராஜ்யசபாவிலும் டிகே சுரேஷ் எம்பி பேச்சு குறித்து எழுப்பப்பட்டது. ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், காங்கிரஸ் எம்பி சுரேஷ் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். இது தொடர்பாக காங்கிரஸ் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார்.
இதற்கு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே விலக்கம் அளித்தார். மல்லிகார்ஜூன கார்கே தமது விளக்கத்தில், டிகே சுரேஷ் எம்பி ராஜ்யசபா உறுப்பினர் கிடையாது. அவரை பற்றி பேச வேண்டியது இல்லை. ஆனால் இந்த நாட்டை துண்டாட யார் நினைத்தாலும் அதனை சகித்துக் கொண்டிருக்க மாட்டோம். அப்படி பேசுகிறவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நாங்கள் ஏற்க மாட்டோம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாம் அனைவரும் ஒன்று என்பதுதான் எங்கள் நிலைப்பாடு என்றார்.












Click it and Unblock the Notifications