பிரதமரை பிடிக்கலனு சொன்னாலே கைது தான்.. உச்சநீதிமன்ற மாஜி நீதிபதி பரபர கருத்து.. கிளம்பிய எதிர்ப்பு
டெல்லி: ‛‛பிரதமர் மோடி பிடிக்கவில்லை என பொதுஇடத்தில் வைத்து கூறினால் என்னை யாராவது தாக்க நேரிடலாம். இல்லாவிட்டால் கைது செய்து சிறையில் அடைக்கப்படலாம்'' என உச்சநீதிமன்றத்தில் முன்னாள் நீதிபதி பிஎன் கிருஷ்ணா பரபரப்பான கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தியாவில் மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பேசும் எதிர்க்கட்சியினர் மீது மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. சமீபத்தில் கூட நேஷனல் ெஹரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது இந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன
இதேபோல் மேற்கு வங்கம், மகாராஷ்டிராவிலும் மத்திய அரசு மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சியினரை மிரட்டுவதாக இன்னும் புகார்கள் எழுந்து வருகின்றன.

உச்சநீதிமன்ற ஓய்வு நீதிபதி கருத்து
இந்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஸ்ரீகிருஷ்ணா இந்தியாவில் கருத்து சுதந்திரம் இல்லை என விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‛‛இன்று நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பொது இடத்தில் நின்று பிரதமர் பிடிக்கவில்லை என்று சொன்னால் என்னை தாக்கி கைது செய்யலாம். மேலும் காரணம் என்னவென்று கூட கூறாமல் சிறையில் தள்ளலாம். தற்போதைய நிலை அதுதான். இதனை நாம் அனைவரும் எதிர்க்கிறோம்'' என கூறியதாக பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

எதிர்க்கட்சியினர் வரவேற்பு
ஓய்வு பெற்ற ஸ்ரீகிருஷ்ணாவின் இந்த கருத்து எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இதனால் இவரது கருத்து பெரும் விவாதப்பொருளானது. இவரது கருத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வரவேற்றுள்ள நிலையில் பாஜகவினர் கடுமையாக எதிர்த்துள்ளனர். அந்த வகையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ டுவிட்டர் மூலம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய சட்டத்துறை அமைச்சர் எதிர்ப்பு
இந்நிலையில் உச்சநீதிமன்ற ஓய்வு நீதிபதி கூறியதாக கூறப்படும் பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ விடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி உண்மையில் இதை கூறினாரா? என்பது எனக்கு தெரியாது. ஒருவேளை இது உண்மையாக இருந்தால் அவர் தான் பணியாற்றிய நிறுவனத்தை இழிவுப்படுத்தியுள்ளார்'' என கூறியிருந்தார்.

கருத்து சுதந்திர கவலையோடு அழுகை
அதோடு, ‛‛ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட பிரதமரை துஷ்பிரயோகம் செய்ய எந்த தடையும் இன்றி எப்போதும் பேசுபவர்கள் தான் கருத்து சுதந்திரம் குறித்து கவலைப்பட்டு அழுகிறார்கள். இத்தகைய நபர்கள் காங்கிரஸ் கட்சியால் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை குறித்தும் பிற மாநில கட்சி முதல்வர்கள் பற்றியும் விமர்சிக்க துணிய மாட்டார்கள்'' என கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications