மோடி பதவி பறிப்பாம்.. சு.சாமி சொன்ன 75 வயது ‛கேம்’.. அட இது அத்வானியையே ஓரம்கட்டிய ரூல் ஆச்சே
டெல்லி: உண்மையான ஆர்எஸ்எஸ் பிரசாரகாரர் என்றால் நரேந்திர மோடி தனது 75 வது வயதில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வேறு வழிகளில் அவரிடம் இருந்து பிரதமர் பதவி பறிக்கப்படும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி கடந்த 2014ல் முதல் முதலாக பிரதமரானார். அதன்பிறகு 2019 லோக்சபா தேர்தலில் வென்று 2வது முறையாக பிரதமராகி உள்ளார். தற்போது ஜூன் 4ம் தேதி வெளியான லோக்சபா தேர்தல் முடிவின் மூலம் அவர் 3வது முறையாக பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறார்.

2014, 2019 ஆகிய ஆண்டுகளில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் கூட மத்தியில் ஆட்சியமைக்க தேவையான 272 எம்பிக்களை விட அதிகம் பெற்றது. அந்த 2 தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வகையில் பாஜக அமோக வெற்றி பெற்றிருந்தது.
ஆனால் இந்த முறை நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவான நிலையில் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா, ஜேடிஎஸ், லோக்ஜன சக்தி (ராம் விலாஸ்) உள்பட பிற கூட்டணி கட்சிகளின் எம்பிக்களுடன் சேர்த்து மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சியை அமைத்து மோடி 3வது முறையாக பிரதமராக உள்ளார்.
தற்போது மோடிக்கு 73 வயது ஆகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ம் தேதி வந்தால் பிரதமர் மோடி 74வது வயதில் அடியெடுத்து வைப்பார். அதன்பிறகு அடுத்த ஆண்டு செப்டம்பர் 17 ம் தேதி பிரதமர் மோடி 75 வது பிறந்தநாளை கொண்டாடுவார். இந்நிலையில் பாஜகவை பொறுத்தமட்டில் எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. அதாவது 75 வயது நிரம்பிய பிறகு பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு கட்சி பதவி, ஆட்சியில் பொறுப்பு எதுவும் வழங்கப்படாது.
அந்த வகையில் பாஜகவை வளர்த்த பல மூத்த பாஜக தலைவர்கள் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் ஓரம்கட்டப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி, கர்நாடகா முதல்வர் எடியூரப்பா உள்பட பல தலைவர்கள் அடங்குவார்கள். இந்நிலையில் தான் பிரதமர் மோடி 75 வயது நிரம்பிய உடன் தனது பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும்.இல்லாவிட்டால் வேறு வழியில் பதவி பறிக்கப்படும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛மோடி அடுத்த ஆண்டு செப்டம்பர் 17 ம் தேதி தனது 75 வயதை அடைகிறார். ஆர்எஸ்எஸ் விதிகள்படி 75 வயதுக்கு மேல் ஓய்வு பெற வேண்டும். இதனால் ஆர்எஸ்எஸ் பிரசாரகாரர் என்பதில் உறுதியாக இருந்தால் மோடி 75 வயதுக்கு பிறகு மோடி பிரதமர் பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும். மாறாக அவர் பதவியில் நீடித்தால் வேறு வழிகளில் மோடியின் பிரதமர் பதவி பறிக்கப்படும்'' எனக்கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
பாஜகவில் 75 வயதுக்கு பிறகு மூத்த தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டு வந்தாலும் கூட சில விதிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கர்நாடகாவை சேர்ந்த பாஜக மூத்த தலைவரான எடியூரப்பாவுக்கு 75 வயதை கடந்தும் கர்நாடகா முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அந்த வகையில் பிரதமர் மோடிக்கும் விதிவிலக்கு அளிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது தற்போது அவர் பிரதமராக 5 ஆண்டு காலத்தை நிறைவு செய்யும் வரை அவரது பதவிக்கு எந்த ஆபத்தும் வராது என கூறப்பட்டது. இந்நிலையில் தான் மோடி 75 வது வயதில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பதவி வேறு வழியில் பறிக்கப்படும் என்று சுப்பிரமணியன் சுவாமி ‛வார்னிங்' செய்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications