பேசுங்க பிரதமர் மோடி அவர்களே.. நீங்க பேசாம இருப்பதுதான் ஆபத்து: கடிதம் எழுதிய ஐஐஎம் மாணவர்கள்
டெல்லி: உங்கள் மௌனம் வெறுப்பு நிறைந்த குரல்களை ஊக்குவிக்கிறது என ஹரித்துவார் வெறுப்பு பேச்சு சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐஐஎம் மாணவர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்கள் தர்ம சன்சத் என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் டெல்லி பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாய், முஸ்லிம் மதத்தில் இருந்து கடந்த மாதம் இந்து மதத்துக்கு மாறிய வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர தியாகி உள்ளிட்ட பல்வேறு இந்து தலைவர்கள் பங்கேற்றனர்.
அந்த மாநாட்டில் பேசிய இந்து மத ஆதரவாளர்கள், சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராகவும், வன்முறைகளை தூண்டும் வகையிலும் பேசியதாக புகார் எழுந்தது. சில இந்து மதத் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துமாறு மக்களை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தும் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஹரித்துவார் வெறுப்பு பேச்சு
மேலும் ஹரித்வார் நிகழ்வில் இந்து மதத் தலைவர் சாந்த் காளிசரண் மகாராஜ் பேசியபோது, அரசியலின் மூலம் தேசத்தைக் கைப்பற்றுவதே இஸ்லாத்தின் நோக்கம் என்று அறிவித்தார். இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய பேச்சு வீடியோ வைரலாகிய நிலையில் காளிசரண் மகாராஜ் இந்து மதத்தை பாதுகாக்க ஒரு உறுதியான இந்துத் தலைவரை தேர்ந்தெடுக்குமாறு மக்களை வலியுறுத்தினார்.

ஐஐஎம் மாணவர்கள் கடிதம்
நாடு முழுவது இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தன. மேலும் இதுபோன்ற பேச்சுகளை பிரதமர் கண்டிக்க வேண்டுமெனவும் கூறியிருந்தன. இந்நிலையில் ஹரித்துவார் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன் எனவும், அவரது மெளனம் வெறுப்பு நிறைந்த குரல்களை ஊக்குவிக்கிறது என ஐஐஎம் மாணவர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தங்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பியுள்ளனர்.

பிரதமர் மெளனம்
ஐஐஎம்- அகமதாபாத் மற்றும் ஐஐஎம்-பெங்களூருவின் 13 ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் உட்பட 183 கையெழுத்திடட்டு அனுப்பியுள்ள அந்த திறந்த கடிதத்தில், நாட்டில் வெறுப்பு பேச்சு மற்றும் சாதி அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராகப் பேசுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அந்த கடித்தத்தில், மாண்புமிகு பிரதமரே, உங்கள் மௌனம், வெறுப்பு நிறைந்த குரல்களுக்கு தைரியம் அளிக்கிறது மற்றும் நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது எனவும், எங்களைப் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக உறுதியாக நிற்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வெறுப்பு பேச்சுகள் ஆபத்து
மதம், சாதி அடையாளங்களின் அடிப்படையில் சமூகங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் மற்றும் வன்முறைக்கான அழைப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதத்தை கண்ணியமாக கடைப்பிடிக்கும் உரிமையை வழங்கியிருந்தாலும், நாட்டில் அச்ச உணர்வு நிலவுகிறதாக கூறியுள்ள மாணவர்கள், சமீப நாட்களில் தேவாலயங்கள் உட்பட வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்படுகின்றன, மேலும் நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்படுகிறது. இவை அனைத்தும் தண்டனையின்றி மேற்கொள்ளப்படுகின்றன என அந்த கடித்தத்தில் மாணவர்கள் கூறியுள்ளனர்.













Click it and Unblock the Notifications