பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம்.. “இயர்போன்” மூலம் சிக்கிய கொலையாளி.. நட்டாவுக்கு பறந்த கடிதம்!
டெல்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெபி நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் மருத்துவ மேற்படிப்பில் பயிற்சி பெற்று வந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு பணியில் இருந்த அந்த பெண் பயிற்சி மருத்துவர், மறுநாள் காலை மருத்துவமனையில் உள்ள ஆடிட்டோரியம் ஒன்றில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

உடற்கூறாய்வில் உயிரிழந்த பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து நாடு முழுவதும் நேற்று முதல் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராயை (33) கைது செய்தனர். சம்பவத்தன்று இரவு மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் பெண் மருத்துவர் உட்பட 5 மருத்துவர்கள் ஒன்றாக இரவு உணவை சாப்பிட்டு உள்ளனர். மற்ற 4 மருத்துவர்களும் வெளியே சென்றுவிட்டனர்.
பெண் மருத்துவர் மட்டும் கருத்தரங்கு கூடத்தில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய், உள்ளே நுழைந்து பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். சிசிடிவி காட்சி மூலமாக கொலையாளியை போலீசார் கண்டறிந்தனர்.
கருத்தரங்கு கூடத்தில் சிசிடிவி இல்லாத நிலையில், மருத்துவமனை வளாகத்தின் மற்ற பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இருந்ததால் அவற்றில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சஞ்சய் ராய், அங்கு வந்துள்ளார். அவர் காதில் இயர்போன் மாட்டி இருந்தார். சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு அவர் அங்கிருந்து வெளியேறி உள்ளார். அப்போது காதில் இயர்போன் இல்லை. அவர் காதில் மாட்டி இருந்த இயர்போன், பெண் மருத்துவர் உடல் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்கு வங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப்பில் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மருத்துவர்கள், மருத்துவர் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவின் அழைப்பின் பேரில் இந்திய மருத்துவ சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது மருத்துவர்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மருத்துவர்கள் சங்கத்தினரின் சில கோரிக்கைகளை ஏற்க அரசு தயங்கியதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு (ஐஎம்ஏ) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், "இந்த வழக்கில் பாரபட்சமற்ற முழுமையான விசாரணை மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும். பணியிடங்களில் மருத்துவர்களின் குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications