8 வருஷமாக பக்கோடா தயாரிக்கும் அறிவைதான் கொடுத்தீர்கள்.. மோடியை கடுமையாக சாடிய ராகுல்காந்தி
டெல்லி: அக்னிபாத் திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், ‛‛8 ஆண்டில் இளைஞர்களுக்கு 16 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பக்கோடா தயாரிக்கும் அறிவு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது'' என பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அக்னிபாத் திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பீகார், உத்தர பிரதேசம், தெலங்கானா செகந்திரபாத் உள்பட பல இடங்களில் போராட்டம் வன்முறையானது. ரயில்களுக்கு தீவைக்கப்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தால் சலுகைகள்
இந்த போராட்டத்தின் காரணமாக மத்திய அரசு சில சலுகைகளை அறிவித்தது. அதாவது இந்த திட்டத்தில் முதலாமாண்டில் ஆள்சேர்ப்புக்கான வயது வரம்பு 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்தில் செயலாற்றியவர்களுக்கு மத்திய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். மேலும் மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும், அக்னிவீரர்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கவும், இந்த தளர்வு முதல் பேட்சுக்கு 5 ஆண்டாகவும் இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு மறுப்பு
இதன்மூலம் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற முடியாது என்பதை கூறியுள்ளது. இந்நிலையில் தான் திட்டம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளின் தளபதிகளுடன் இன்று 2வது நாளாக டெல்லியில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் திட்டம் செயல்பாடு, சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

திரும்பபெற காங்கிரஸ் வலியுறுத்தல்
இதற்கிடையே அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி இந்த கோரிக்கையில் உறுதியாக உள்ளது.ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் இன்று தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

பக்கோடா அறிவு மட்டுமே...
இந்நிலையில் ராகுல்காந்தி இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அக்னிபாத் திட்டத்ம் பற்றி விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛வேலை தொடர்பாக தவறான நம்பிக்கையை பிரதமர் மோடி கொடுத்துவிட்டு இப்போது இளைஞர்களை வேலையில்லா திண்டாட்டம் எனும் அக்னிபாதையில் நடக்க கட்டாயப்படுத்துகிறார். 8 ஆண்டில் இளைஞர்களுக்கு 16 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பக்கோடா தயாரிக்கும் அறிவு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் இத்தகைய நிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி காரணம்'' என விமர்சனம் செய்துள்ளார்.

தொடர் விமர்சனம்
முன்னதாக, ராகுல்காந்தி, ‛‛இந்தியா 2 பக்கங்களில் இருந்து ஆபத்தை நோக்கி இருக்குமே்பாது ராணுவத்தில் தேவையில்லாத அக்னிபாத் திட்டம் வீரர்களின் செயல்பாட்டு திறனை முற்றிலும் குறைக்கம். பாஜக அரசு நம் ராணுவத்தின் கண்ணியம், பாரம்பரியம், வீரம் மற்றும் ஒழுக்கத்தில் சமரசம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும். கடந்த 8 ஆண்டுகளாக பாஜக அரசு ஜெய்ஜவான், ஜெய் கிஷான் என்பதன் மதிப்பை அலட்சியப்படுத்தி வருகிறது. விவசாய சட்டங்களை அரசு திரும்பெ பெறும் என்று நான் கூறியதை போல் இப்போதும் இளைஞர்களின் குரலுக்கு செவிசாய்த்து அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறுவார்'' என விமர்சனம் செய்து இருந்தார்.












Click it and Unblock the Notifications